பக்கம்:ஐந்திணை வளம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஐந்திணை வளம் வுறவையும் அவள் ஆதரிக்கின்றாள்; அது மணமாகி மலர வேண்டும் என்ற சமூகவிதியையும் அவள் மறக்கவில்லை. தோழியரின் இந்த நிலையை நாம் நினைவிற் கொண்டால், நமக்கு அன்பின் ஐந்திணை வாழ்விலே அவர்களுடைய முதன்மையான இடம் என்னவென்பதும் நன்கு விளங்கும். 7. அன்னாய் வெகுளாதே! நேரடியாகத் தலைவனைச் சந்தித்து, அவனிடம் விரைவிலே வரைந்து கோடலைக் கருதுமாறு தூண்டுகின்ற தோழியது சொல்லாற்றலை மேலே கண்டோம். இப்படி நேரடியாகச் சொல்வதன்றிப்படைத்து மொழிதலின் மூலமும், அவர்கள் தம்முடைய கருத்தினைத் தலைவனுக்கு உணர்த்துவார்கள். இப்படி உணர்த்துகின்ற ஒரு காட்சியையும் நமக்குக் காட்டுகின்றனர் மூவாதியர். பகல் வேளையிலே, சோலைப்புறத்தே, குறிப்பிட்ட ஓரிடத்தில், தலைவனும் தலைவியும் சந்திப்பதென்ற முன்னேற்பாட்டின்படி, தோழியும் தலைவியும் வந்து, அந்தக் குறிப்பிட்ட இடத்திலே அவனுக்காகக் காத்திருக்கின்றனர். தலைவன் வரவில்லை. அவன் வரவுக்காகக் காத்திருக்கின்ற வேளையில் தலைவி அவன் நினைவாகவே தன்னை மறந்தவளாக இருக்கின்றாள். தோழியோ, அப்போது தலைவன் வந்ததனையும் அவன் பக்கத்தே தான் ஒதுங்குவதனை எதிர்ப்பார்த்து ஒதுங்கி நிற்பதனையும் அறிகின்றாள். அவளுடைய உள்ளத்திலே ஒரு நினைவு எழுகின்றது. தலைவனுக்குத் தங்களுடைய இக்கட்டான நிலையினை எடுத்துக்காட்டவும் அதன் மூலம் அவன் உள்ளத்தைக் களவு உறவினின்றும் விலக்கி, மணந்து வாழும் இல்லற உறவிற்குச் செலுத்தவும் முடிவு செய்கின்றாள். தலைவிபால், தலைவனோடு கூடிவருவதனால் உண்டாகிய மாற்றங்களைத் தலைவியின் செவிலித்தாய் அறிந்துவிட்டதாகவும், அதனால் ஐயுற்றுத் தன்னை வினவியதாகவும், தான். அவட்கு விடையிறுக்க ஆற்றாது கவலையுற்றதாகவும் ஒரு நிலையினைத் தோழி படைத்துக் கொள்ளுகின்றாள். அப்படிப் படைத்துக் கொள்பவள், தலைவியும் தானும் இருக்குமிடத்திலேயே தாயும் இருப்பதாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/30&oldid=761830" இலிருந்து மீள்விக்கப்பட்டது