பக்கம்:ஐந்திணை வளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 23 கற்பித்துக் கொண்டு, தன் கருத்தை உரைக்கவும் தொடங்குகின்றாள். 'அன்னாய்! எங்களைச் சினந்து ஏதும் கூறுதல் வேண்டா என்று பேச்சைத் தொடங்குகின்றாள். தாய் தலைவியை ஐயுற்றது மட்டுமன்று; சினந்தும் கடிந்தும் கொண்டனள் என்பதனையும், அதன்மேல் அவள் அவர்களைக் காவலுக்கு உட்படுத்துத்லைச் செய்தாலும் செய்வள் என்பதனையும், இந்தச் சொற்கள் தலைவனுக்கு உணர்த்துகின்றன. அவன்,தங்கள் உறவு ஒரு புதிய திருப்பத்தை நோக்கிப் போவதையும், களவினைத் தொடர்வது அதன்மேற் பெரிதும் இடர்ப்பாடான நிலைமைகளை உண்டாக்குவதாக இருக்கும் என்பதனையும் உணர்கின்றான். தோழியோ மேலும் தொடர்கின்றாள். "இவளோ தவறிலள்; அதனாற் காய்ந்தியல் அன்னாய்' என்கின்றாள். தலைவி தவறு செய்யாதவளாம்! தோழி கூறுகின்றாள். தங்கள் உறவினை அன்னைக்கு மறைக்கத் துணிந்து பொய்பேசவும் முற்பட்டுவிட்ட தோழியின் செயலைக் கண்டதும், அந்தநிலைக்கு அவளைக் கொணரச் செய்த தனது செயலினை நினைந்து தலைவன் வருந்துகின்றான். இனியும் இந்த நிலையைத் தொடர்ந்து நிகழுதற்கு விடாது, விரைவிலே தலைவியை மணந்து கொள்ளுதற்கான முயற்சிகளிலே மனத்தைச் செலுத்த வேண்டும் என்ற உறுதி பிறந்தவனாகவும் ஆகின்றான். சிறப்பு மிகுந்த சிவந்த நீர் வழிந்தோடுகின்ற காட்டாற்றிலே, தேன் கலந்து வீழ்கின்ற அருவியிலே, முழுகித் திளைத்து விளையாடினோம். அதனாற் கண்கள் சிவந்தன. அவையன்றி யாம் ஏதும் தவறாயின செய்தறியோம். எம்மைச் சினந்து கொள்ளல் வேண்டா என்கிறாள் தோழி. தலைவன் பெருமூச்சு விடுகின்றான். தோழியின் புத்தி நுட்பத்தை வியக்கின்றான். அவர்கள் முன்பாகவருவதற்கும் நாணுகின்றான். எனினும், ஆர்வம் மிக்கெழத் தாய் செல்வதற்குச் சிறிது காத்திருந்து, மறைவாகத் தாய் இல்லாமையை நோக்கி அறிந்தபின், அவர்கள் முன்தோன்றுகின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/31&oldid=761831" இலிருந்து மீள்விக்கப்பட்டது