பக்கம்:ஐந்திணை வளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஐந்திணை வளம் தாயின் ஐயத்தையும் சினத்தையும் பற்றித் தோழி கூறியதைத் தானும் கேட்டதாகவும், விரைவிலே வரைந்து வேட்டலுக்கு முயல்வதாகவும் உறுதி கூறுகின்றான். சுவையான இந்தக் காதற்காட்சி மூவாதியரையும் கவர்கின்றது. அவருடைய தமிழ் உள்ளம் செய்யுள் வடிவாக மலர்கின்றது. காய்ந்தீயல் அன்னை! இவளோ தவறிலள்; ஓங்கிய செந்நீர் இழிதரும் கான்யாற்றுள் தேங்கலந்து வந்த அருவி குடைந்தாடத் தாஞ்சிவப் புற்றன கண். உண்மையாகத் தாய் கேட்கவும் இல்லை; தலைவியோ தோழியோ அதற்கு விடையிறுக்க வேண்டிய அவசியமும் உண்டாகவில்லை. என்றாலும், இப்படிப் புதுமைப்பட ஒன்றைப் படைத்துக் கொண்டு சொல்லுவதன் மூலமாகத் தங்கட்கு வருகின்ற துன்பங்களைத் தலைவனுக்கு உணர்த்துகின்றாள் தோழி, சொல்லாற்றல் மிகுந்த தோழியரைப் பெற்றதனால் தான், களவுறவுகள், அந்த நாளிலே சமூகத்தில் பெரிதான கேட்டினை விளைக்கவில்லை போலும். 8. அறிவின்கண் நின்ற மடம் தோழி நினைப்பது போல எல்லாம் விரைந்து நிகழ்ந்துவிடவில்லை. அதனால், அவள் பொறுப்பு மிகுதி யாகின்றது. தலைவனைத் தூண்டுதலை அவள் தவறாது மேற்கொள்ளுகின்றாள். எனினும், அவனைப் பிரிந்து இருக்கப் பொறாதவள் தலைவியாதலின், அவர்களுடைய சந்திப்பிற்கும் உதவியாக இருக்கின்றாள். ஒருநாள், தலைவனும் தலைவியும், தம்முட் களவிலே கூடியவராக இன்புற்று மகிழ்கின்றனர். அதன்பின், தலைவன் தன் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றான். எதிரே தோழி வருகின்றாள். அவளைக் கண்டதும், அவன் நன்றியுடன் வணக்கஞ் செலுத்துகின்றான். பதில் வணக்கத்தைச் செலுத்தியவளாக, அவள் பேசுகின்றாள். 'மிளகுக் கொடிகள் வளர்ந்துள்ள, தித்திப்பான மாவினது நல்ல கனியானது, மனங்கமழும் குளிர்ந்த சுனையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/32&oldid=1279304" இலிருந்து மீள்விக்கப்பட்டது