பக்கம்:ஐந்திணை வளம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஐந்திணை வளம் 11. நின்றது நீர் "ஏனடி! இதுவோ மனத்திற்கு மகிழ்வூட்டுகின்ற மாலைக்காலம். இந்த வேளையிலே நின் துயரையெல்லாம் சற்றே மறந்துவிட்டு, அவர் விரைவிலே வந்துவிடுவார் என்ற நம்பிக்கையிலே மனத்தைச் செலுத்தி, அவர் வந்தால் அவருடன் கூடிப்பெறப்போகும் இன்பத்திலே உள்ளத்தைக்களிகொள்ளச் செய்து, சிறிது ஆற்றியிருக்கலாகாதோ' என்று கூறித் தோழி தலைவியை தெளிவிக்க முயலுகின்றாள். அவள் கொண்டுள்ள துயரம் பிறரால் தெளிவித்து மாற்றக் கூடியதா என்ன? தெளிவிக்கத் தெளிவிக்க அது வளர்ந்து பெருகுகின்றது. தோழியின் சமாதான உரைகள் விரகத் தீயை விசிறி கொண்டு விசிறி விசிறி மூட்டி விடுவனவாகவே அமைகின்றன. "தோழி! மழை பொழிகின்றது. அதனால், வாகை மரங்கள் பூத்து மணம் பரப்புகின்றன. காட்டிடம் எல்லாம் வண்டினங்கள் ஆரவாரிப்புடனே ஒலித்துக் கொண்டு திரிகின்றன. அவற்றைக் காணாய். “நற்குணங்களே இல்லாமல், சிறுமைகொண்டு என்னை வருத்துகின்ற மாலைக் காலத்தையும் பாராய். எனக்கு மாறுபட்டு அது என்னை வருந்தி நிற்பதாக, என் கண்களிற் கண்ணிரும் நிலையாக நின்றதேடீ யான் எப்படியடி ஆற்றியிருப்பேன்" என்கின்றாள்.தலைவி. கார்ப்புடைப் பாண்டில் கமழப் புறவெல்லாம் ஆர்ப்போடு இனவண்டு இமிர்ந்தாட-நீர்த்தன்றி ஒன்றாது அலைக்கும் சிறுமாலை மாறுழந்து நன்றாக நின்றது நீர். - தலைவனின் வாராமையோடு துயருறுகின்றவள். அவனைப் பற்றி எதுவும் கூறி நொந்து கொள்ளவில்லை. மாறாகக் காரினது வரவையும், மாலையினது சிறுமையையும் நினைந்துதான்புலம்புகின்றாள். தலைவியின் கற்பு மேம்பாடும், தலைவன்பாற் கொண்டுள்ள காதல் மிகுதியும் இதனால் தெளிவாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/56&oldid=761858" இலிருந்து மீள்விக்கப்பட்டது