பக்கம்:ஐந்திணை வளம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - - 61 "தோழி! நம் தலைவர் நம்பால் இரக்கம் என்பதில்லாத நெஞ்சினை உடையவராக ஆகிவிட்டார். 'பீர்க்கங் கொடிகள் மேலேறிப் படர்ந்துள்ள கூரைகளையுடைய பாழ்பட்டுக் கிடக்கும் பாலைநிலத்துக் குடிசைகளிலே, கூர்மையான நகங்களையுடைய கரடியினது பெரிய கூட்டங்கள் எல்லாம் தங்கி உறக்கங் கொண்டிருக்கும் தன்மையது காட்டுநெறி' என்பார்கள். - - உண்ணுதற்கு. நீரும் இல்லாதபடி வறட்சியுற்றுக் கிடக்கின்ற அத்தகைய பாலை நிலத்தினது கொடுமையினைத் தம்நெஞ்சத்தே நினைத்துப் பார்த்து, அவ்வழிச் செல்லுதலும் வேண்டாதவொன்று என்பதனை அவர் அறியாரோ? அவர் செல்வதைப் பற்றித் தான் எந்தக் கருத்தையும் தலைவி கூறுதற்குத் துணிந்தனள் இல்லை. ஆனால், தலைவன் செல்லுகின்ற வழியினது ஏதத்தைக் குறித்துத்தான் அவள் பெரிதும் கவலைப்படுகின்றாள். ‘பாழ் அடைந்த குடிசைகளிற்கூட இவரால் தங்குவதற்கு முடியாதே? என்ன செய்வாரோ? என்றுதான் அவள் கவலைப்படுகின்றாள். பீர்இவர் கூரை மறுமனைச் சேர்ந்தல்கிக் கூர்உகிர் எண்கின் இருங்கிளை கண்படுக்கும் நீரில் அருஞ்சுரம் உன்னி யறியார்கொல் ஈரமில் நெஞ்சின் அவர். 'பீர் இவர் கூரை மறுமனை என்றலால், அப் பகுதிக் கண் குடியிருந்தாருங்கூடக்கோடையின் வெம்மைக்கு ஆற்றாது தம் குடியிருப்பைக் காலிசெய்து போய் விட்டனர் என்பது விளங்கும். விளங்கவே, அவ்வழிச் செல்வார் உறக்கூடிய கொடுந்துன்பமும் உணரப்படும். இப்படித் தலைவனின் நினைவாகவே வாழ்கின்ற உள்ளச் செவ்வியினராகத் தலைவியர் திகழ்கின்றதனையும் இச் செய்யுளால் நாம் அறியலாம். 7. தெருள் இலார் தலைவன் கடந்து செல்கின்ற கானத்தின் நினைவினைத் தலைவியால் மறக்கவே முடியவில்லை. அதனையே உளங்கொண்டு பன்னிப்பன்னிப்புலம்புகின்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/69&oldid=761872" இலிருந்து மீள்விக்கப்பட்டது