பக்கம்:ஐந்திணை வளம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்த நூல்...


     மனித உணர்வுகளை நுட்பமாகப் புரிந்துகொண்டு, அந்த உணர்வுகளின் போக்கையும், அவற்றால் அமையும் அகவாழ்வு புறவாழ்வுகளையும் தெளிவாக வகுத்துக் காட்டியிருப்பவர்கள், பழந்தமிழ்நாட்டுப்பாவலர்களும், அறிஞர்களுமே ஆவர்.
     பருவத்தின் எழுச்சியோடு இணைந்து நிலத்தின் தன்மைகளும், காலத்தின் தன்மைகளும் எவ்வாறு எல்லாம் மக்களின் வாழ்வை உருவாக்குகின்றன என்பதையும், அவர்கள் இலக்கியச்சுவையோடு சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
     இது தமிழ் மொழிக்கே உரிய ஒரு தனிச்சிறப்பாகவும், அறிஞர் உலகத்தால் வியந்து போற்றப்பெறுகின்றது.
     இவ்வகையில், குறிஞ்சி,முல்லை,மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்திணை ஒழுக்கங்களிலும், காதலர்களின் உணர்வுகளும்,செயல்களும், பேச்சுக்களும் எவ்வாறு எல்லாம் அமைந்து விளங்கின என்பதனைச்சுவையாகவும்,நுட்பமாகவும் விளக்குவது, மூவாதியரின் ஐந்திணை எழுபது என்னும் நூல் ஆகும்.
     அந்த நூலின் செய்யுட்களைத் தழுவிக் காதலர்களின் வாழ்வுப்போக்கை 

அனைவருக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுவதற்கு முயன்றிருக்கின்றேன். அந்தக்கால வாழ்வுச் செழுமையை அறிந்துபோற்றவும் இது உதவும்.

     தமிழன்பர்கள் இந்த இனிய நல்லதமிழ் விருந்தினை விரும்பி வரவேற்பார்கள் என்று நம்புகின்றேன். அன்னை பராசக்தியின் அருளையும் நினைந்து வணங்கிப் போற்றி இதனைத் தமிழ் உலகுக்கு வழங்கி மகிழ்கின்றேன்.                                                   புலியூர்க் கேசிகன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/7&oldid=1080381" இலிருந்து மீள்விக்கப்பட்டது