பக்கம்:ஐந்திணை வளம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O ஐந்திணை வளம் மாலையில் நம் இல்லத்திற்குச் செல்ல நினைக்கின்றோம். நீ சென்று எம் தலைவியிடம் எம் வருகையை அறிவித்து வருக என்று ஏவுகின்றான். பாணனும் அந்த ஏவலை மேற்கொண்டவனாகத் தலைவனின் இல்லத்திற்கு வந்து சேர்கின்றான். அங்கே தயங்கித் தயங்கி நுழைந்த அவன், தன் அருமை மகனுக்கு அன்போடு பாலூட்டியவளாக வீற்றிருக்கும் தலைவியைக் கண்டு ப்ணிந்து நிற்கின்றான். ‘வா பாணனே! என்ன செய்தி? நின் தலைவர் எங்கிருப்பாரென்பது உனக்குத் தெரியாது போலும்? இங்கேன் வந்து நிற்கின்றனை?’ என்று எள்ளலாகவும் குத்தலாகவும் வினவுகின்றாள் தலைவி. பாணன் அவற்றைக் கேட்டுச் சிறிதே அச்சமுற்றவன் போல் நின்றபின்,தலைவியின் சினமொழிகள் நியாயமானவை என்பதனையும் உணர்ந்தானாக, மெல்லத் தான் சொல்ல வந்த செய்தியையும் உரைக்கத்தொடங்குகின்றான். "தாயே! தலைவர் இன்று மாலை நம் இல்லிற்கு வருகின்றாராம். தங்கள் பால் செய்தியறிவிக்கவே என்னை விடுத்தனர். தாங்கள் அவரை ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இடையில் நிகழ்ந்தன பலவற்றையும் மறந்து விடுங்கள். உங்கள்பால் அவர் கொண்டுள்ள காதல் உயர்ந்தது. அதனைப் புறக்கணிக்க வேண்டாம். அவர் மனம் உங்கள்பால் திரும்பு வதான இந்த நற்செய்தியைக் கொண்டுதான் யான் வந்துள்ளேன்’ என்கின்றான். பாணன் இவற்றைச் சொல்வதற்குள், அவன் தயங்கிய தயக்கமும் மயங்கிய மயக்கமும் பெரிதாயிருந்தன. தலைவனுக்காகச் சென்று, அந்தப் பரத்தையை இசைவித்துக் கூட்டியவனும் அவனேதான். அவனுடைய அந்தச் செயலைத் தலைவியும் அறிந்தவளாகவே, அவன் மனம் அவள் முன்பாக வந்து நிற்பதற்கே நாணமுற்றது. அவன் தலைகவிழ்ந்தவனாகத் தலைவியின் இசைவினை எதிர்நோக்கி நின்றான். "பாணனே!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/88&oldid=761893" இலிருந்து மீள்விக்கப்பட்டது