பக்கம்:ஐந்திணை வளம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 85 "அப்பொழுது அவன், மகப்பெற்றமையால் தளர்ந்து வீழ்ந்துள்ள நம் மகளின் முலைகளைப் பாராட்டியவனாக, அம் முலைகளின் வளர்ந்து தோன்றும் கண்களை நெருடிக் கொண்டிருந்தான் என்கின்றாள் செவிலி. மகப்பெற்ற பின்பும்,தலைவனின் காதல் தன் மகள் பால் பெருகி நிற்பதறிந்த தாயும் பெரிதும் மகிழ்வுற்று, அவர்கள் இன்ப வாழ்வினைத்தன் மனமாற வாழ்த்துகின்றாள். தேங்கமழ் பொய்கை அகல்வயல் ஊரனைப் பூங்கட் புதல்வன் மிதித்துழக்க-வீங்குந் தளர்முலை பாராட்டி என்னுடைய பாவை வளர்முலைக் கண்ஞமுக்கு வார். குடும்பத்தே அமைந்திலங்கும் காதற் பெரும் பாசத்தினை நயமுற விளக்கிக் காட்டுகின்ற, செறிவுடைய செய்யுள் இது. 6. செல்க பாண! பாணன்சென்று தலைவிபால் உரைத்தனையும்,அதனை மறுத்து அவள் சொல்லிய சொற்களையும் முன்னர்க் கண்டோம். அதே போன்று, மற்றொரு தலைவியும் பாணனுக்கு வாயின் மறுத்து உரைக்கின்ற இயல்பினை இந்தச் செய்யுளிற் காண்கின்றோம். “பாணனே!” "பலவகையான ஆரவாரங்களாலும் மிகுந்து விளங்கும் மருத நிலத்துத் தலைவனாகிய எம் தலைமகனுக்கு எம்பால் ஆவதொன்றும் இருப்பதற்கு நியாயமில்லை.” "அவன் எம்மை மறந்துபோயினதன் பின்னர் எமக்குத் துணையாகச் சான்றோனாகிய எம் புதல்வனையே அடைக்கலமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்ற பேதைமை உடையவர் யாம். இனி, யாம் தலைவனுக்கு எதுவும் இன்புறுத்தற்காவன செய்தற்கு ஏற்றவரும் ஆகேம். “ஆதலினாலே, பூக்கள் நிறைந்ததும், சுருட்டி முடித்ததுமான கூந்தலையுடையவரும், திருமகளைப் போன்ற அழகியருமான பரத்தையரது சேரியினுள்ளாக நீ செல்வாயாக! இங்கு வந்த காலத்தை வீணாக்காது, இனி இடைவிடாது அங்கேயே நீயும் செல்வாயாக!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/93&oldid=761899" இலிருந்து மீள்விக்கப்பட்டது