பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10

நன்கு புலப்படும். தாய்ச் செல்வத்தின் பெருமையைப் புலவர் இச் சொற்களைக்கொண்டு கூறாமல் கூறியிருப்பது அறிந்து மகிழத்தக்கது.

தாயின் சொற்களைத் தட்டிவிட்டால், பின்பற்றி நடப்பதற்குப் பிற சொற்கள் இல்லையென்பது ஓர் அறிஞரின் முடிவு. இதை அவர், “தாய் சொல் துறந்தால் வாசகமில்லை” என்ற சொற்களால் கூறிவிட்டார். பிறர் கூறுகின்ற புத்திமதிகளில் ஒருகால் வஞ்சகம் கலந்திருந்தாலும் இருக்கலாம்; ஆனால், தாயின் சொற்களில் இது அடியோடு இராது என்பது அவரது கருத்து.

இறைவிக்கும் இறைவனுக்கும் உவமையாகக் கூறப் பக்திமான்களுக்குக் கிடைத்த உவமைகள் கூட, தாயும் தந்தையும்தான் எனத் தெரிகிறது. இவ்வுண்மையை “அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!” என்ற மணிவாசகரின் திருவாசகம் நமக்கு விளக்கும். ‘அம்மையே! ஒப்பிலா மணியே!’ என்ற சொற்களில் தாயையும் இறைவியையும் ஒன்றாகச் சேர்த்தக் கூறி, இவர்கள் ஒப்பிலா மணிகள் என வியந்து கூறியிருப்பது உய்த்துணரத்தக்கது.

தன் குழந்தை, ‘அம்மா!’ என்று அழைப்பதைக் கேட்ட தாயின் உள்ளம் எவ்வளவு குளிர்ச்சியடைகின்றது? என்பதைக் குழந்தைகளைப் பெறாத பெண்கள் எவ்வாறு அறிவார்கள்? அவர்கள் அறியவும் முடியாது; அவர்களுக்கு அறிவிக்கவும் இயலாது. தான் பெற்ற பிள்ளை மட்டுமா? பிறர், “அம்மா!” என்றழைப்பதைக் கேட்டுவிட்டால், பெண்மக்களின் உள்ளம் இளகியே போய்விடும். இதனை அறிந்தே, பிச்சை எடுப்பவர் அனைவரும், இச் சொல்லையே துணையெனக்கொண்டு வாழ்கின்றனர் போலும்! அம்மா என்பது எவ்வளவு இனிமை கலந்த சொல்? இந்த நல்ல தமிழ்ச் சொல்லையே உலகிலுள்ள எல்லா நாட்டினரும், மொழியினரும் பெற்ற தாய்க்கு இட்டு அழைக்கின்றனர் அம்மா என்பதில் பின் எழுத்தும், தாயே என்பதில் முன் எழுத்தும் சேர்ந்தே