பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14


“தம்பி! அது சரி! கலை உணர்ச்சி ஒன்றுதான் மக்களையும் மாக்களையுப் வேறுபடுத்திக் கூறுவதற்கு உதவி செய்து வருகிறது. மேலும் சிந்தனை செய்.”

“அண்ணா! வாடி வதங்கி அழுவோரின் துன்பங்களைக் கண்டு வருந்தி, கண்ணீர் வடிப்பதெற்காகத்தான் கண்கள் இருக்கின்றன.”

“தம்பி! ஆம்; அதுவும் கண்களுக்கு அணி செய்கிறது. “கண்ணுக்கணிகலன் கண்ணோட்டம்; அஃதின்றேல் புண் என்றுணரப்படும்” என்பது வள்ளுவர் வாக்கு. மேலும் சிந்தனை செய்.”

“அண்ணா! தூசி, கல், மண் முதலியவை விழுந்து பாழாகிவிடாமல், கண்களை இமைகள் காப்பாற்றி வருகின்றன. பிள்ளைகளைப் பெற்றோர் காப்பாற்றுவதைவிடச் சிறிது அதிகமாகவே கண்களை இமைகள் காப்பாற்றுகின்றன. கம்பர்கூட தமது இராமாயணத்தில் விசுவாமித்திரரையும், அவர்தம் யாகத்தையும், இராமலட்சுமணர்கள் கண்களை இமை காத்தது போல் காத்தனர் எனக் கூறியிருக்கிறார். அண்ணா! இதில் ஒரு நயமும் காணப்படுகிறது.”

"கீழ் இமை இருந்தவிடத்திலேயே இருக்கிறது. மேல் இமை கீழ் இமையைத் தொட்டுத் தொட்டு விழிப் படையச் செய்து இரண்டுமாகச் சேர்ந்து கண்களைக் காப்பாற்றுகின்றன அல்லவா? அதுபோலவே இலட்சுமணர் யாகசாலையின் வாயிலில் இருந்திருக்கிறார். இராமர் சுற்றிச் சுற்றி வந்து, தம்பியைத் தொட்டு, தம்பி! எச்சரிக்கை! தம்பி! எச்சரிக்கை!” என விழிப் படையச் செய்து, இருவருமாகச் சேர்ந்து விசுவாமித்திரரையும் அவர்தம் யாகத்தையும் காப்பாற்றி இருக்கின்றனர் போலும்! இதை அறிந்துதான் கம்பர் இந்த உவமையைக் கையாண்டிருக்கிறார் போலத் தோன்றுகிறது.”

“தம்பி! அதுவும் சரி! நன்கு சிந்திக்கிறாய்! மேலும் சிந்தனை செய், உம்!”