பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17

சிந்தனைக்குக் கருவூலமாக இருந்துவருகிறது. வள்ளுவர் பெருமானும் கேள்வியை ஒரு சிறந்த செல்வம் என்றார். அது மட்டுமல்ல, ‘செல்வத்துள் எல்லாம் தலையாய செல்வம் செவிச் செல்வமே!’ என்று அறுதியிட்டும் கூறியுள்ளார். மனித உறுப்புக்களின் இயற்கை அமைப்பே கொஞ்சமாகப் பார்! குறைவாகப் பேசு! அதிகமாகக் கேள்! என்று கூறுவது போலத் தெரிகிறது. நீ இன்னும் சிறிது முயன்றிருந்தால் உனக்கே இது புலப்பட்டிருக்கும். நான் கூறியிக்க வேண்டியதில்லை.”

“ஆம் அண்ணா! உண்மைதான். இயற்கை அமைப்பே அமைப்பு! நெடுநேரம் பார்த்தால் கண் வலிக்கிறது, நெடுநேரம் பேசினால் வாய் வலிக்கிறது. நெடுநேரம் கேட்டால் காது வலிப்பதில்லை. இதுவும் தங்கள் கூற்றை மெய்ப்பிக்கிறது அண்ணா?”

“தம்பி! பார்த்தாயா? என்னிலும் நீ ஒரு படிதாண்டி விட்டாய் அதை நான் சிந்திக்கவில்லை. சிந்தித்தால் யாவும் நன்கு விளங்கும். உண்மையைக் காண, சிந்தனை ஒன்றே பெருந்துணை செய்யும். சிந்தனை ஒரு சிறந்த செல்வம், அதை இழந்துவிடாதே. பயன்படுத்து! நன்கு பயன்படுத்து. திருவள்ளுவர் செவியைச் செல்வம் என்றது, எல்லோருடைய செவியையும் அல்ல. சிந்திக்கும் ஆற்றலுடைய மக்களின் செவியை மட்டுமே; செல்வம் என்றார். சிந்தனையற்ற மக்களின் செவியானது செல்வமுமல்ல; செவியுமல்ல; அது ஒரு துளை! அவ்வளவுதான்!”

“ஆகவே தம்பி நீ சிந்தனைச் செல்வத்தைப் பெறு! அது உனக்குக் கல்விச் செல்வத்தையும் கேள்விச் செல்வத்தையும், பொருட் செல்வத்தையும், பிற செல்வத்தையும் தரும்.”

“அண்ணா! அப்படியே ஆகட்டும். சிந்தனையும் ஒரு செல்வம் என்பதை நான் இன்று தான் அறிந்தேன். இனி நான் சிந்திப்பேன். அச்செல்வத்தால் பயன் அடைவேன். தங்கள் அன்பிற்கு நன்றியும் வணக்கமும்!”

ஐ.செ.-2