பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23

உன் பாட்டன் என்னிடம் வந்து, “உன் மகன் மருமகளை அடித்தானா?” என்று கேட்டார். ‘ஆம்’ என்றால் அப்பன் மகனுக்குள் வருத்தம் வருமோ என அஞ்சி, அரைப் பொய்யாகத் ‘தெரியாது’ என்று கூறினேன், அவர் மகனைக் கேட்டார். அவன் “ஆம்” என்று உண்மையைக் கூறி, மனைவி கண்முன்னே பொய் கூறியதால், சகிக்க முடியாமல் ஆத்திரம் வந்து அடித்துவிட்டேன் என்று வருந்தி அழுது, அவன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டான். உன் தாயும் தான் பொய்சொன்ன தவறுக்காக வருந்தி, உன் தந்தையிடம் மன்னிக்கும்படி வேண்டினாள். உன் தந்தையும், உன் தாயிடம், தான் அடித்ததை மறந்து மன்னிக்கும்படி வேண்டினான், அடுத்த நாள் உன் தாய் அமைதியாக இவ்வுலகத்தைத் துறந்துவிட்டாள்!

உன் தந்தைக்கு இவ்வுலகமே இருண்டு விட்டது போலத் தெரிந்தது. அவனுக்கு மன அமைதியில்லை. மறுமணம் செய்துகொள்ள எவ்வளவோ வேண்டியும் உன் தந்தை மறுத்து விட்டான். அடிக்கடி அவன் தன்னைப் “பாவி! பாவி!” என்று கூறிக்கொண்டேயிருந்தான். அடுத்த ஆண்டு தொடங்குவதற்குள் அவனும் உயிர்நீத்தான்!

உன் பாட்டனோ, நான் சொன்ன அரைப் பொய்க்காக 3. ஆண்டுகள் என்னோடு பேசவேயில்லை. இந்த அரைப் பொய்யையும் ‘பயந்துதான் சொன்னேன்’ என்று பல தடவை உன் பாட்டனிடம் கூறி மன்னிப்பை வேண்டியும், அவர் மரணப் படுக்கையிலிருந்தும்கூட, மன்னிப்பு அளிக்க மறுத்து விட்டார். உயிர் பிரியும்போது, அவர் சொன்ன சொல் என்ன தெரியுமா? ‘கண்ணம்மாளைக் காப்பாற்று அவள் முன்பு பொய் பேசாதே’ என்பதுதான் கண்ணு! உனக்காகவே என் உயிர் உடலில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எனக்கு இவ்வுலகமே நீதான் நான் ஒருத்தியே உனக்கு மீதி. ஆ! ஒரு சிறிய பொய்யைப் பேசாதிருந்தால், இக்குடும்பம் எவ்வளவு சிறப்பாக இருத்திருக்கும்?