பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கொள்ள எவராலும் இயலும். ஆகவே, பெற்றோர்களிடத்தில் சில தவறான குணங்கள் இருந்தாலும், அவற்றைப் பிள்ளைகள் அறியாதவாறு வாழ்க்கையை நடத்தியாக வேண்டும். இன்றேல் பிள்ளைகளின் வாழ்வும் கெடும். செல்லத்தின் உள்ளம் அவள் தாயின் தவறுதலால் அழுக்குப் பட்டுவிட்டது. நீ அவளோடு சேர்ந்தால் அந்த அழுக்கு உன் உள்ளத்திலும் படிந்துவிடும் என்றே எச்சரிக்கிறேன்.

கண் : அது எப்படிப் பாட்டி, நாங்கள் இருவரும் சேர்வதால், என் குணம் அவளுக்குப் படியாது? அவள் குணம்தான் எனக்குப் படியும் என்று கூறுகிறீர்கள்? இது ஒன்றை மட்டும் என்னால் ஒப்பமுடியவில்லையே! கெட்டதை நல்லது வெல்லாதா என்ன?

பாட்டி : முதலிலிருந்தே நீ இப்படித்தான் கேட்டு வருகிறாய் அதற்கு விடை இதுதான். நீயே சொல். நெருப்பை நீர் வெல்லுமா? நீரை நெருப்பு வெல்லுமா?

கண் : நெருப்பு மிகுந்திருந்தால் நீர் அழியும்; நீர் மிகுந்திருந்தால் நெருப்பு அணையும். இல்லையா பாட்டி?

பாட்டி : ஆம் கண்ணு! சரியாகச் சொன்னாய், இதிலிருந்து என்ன தெரிகிறது?

கண் : வலிமை மிகுந்த ஒன்று, வலிமை குறைந்த ஒன்றை விழுங்கிவிடும் என்று தெரிகிறது.

பாட்டி : ஆம் கண்ணு; அதுதான் உண்மை. நல்லது மிகுந்தால் கெட்டதை விழுங்கிவிடும். கெட்டது மிகுந்தால் நல்லதை விழுங்கிவிடும். பாலோடு சேர்ந்த நீர் பாலாகும். நீரோடு சேர்ந்த பால் நீராகவே இருக்கும். இப்படித்தான் நீ செல்லத்தோடு சேர்வதும்; செல்லம் உன்னோடு சேர்வதும் ஆகும். அது மட்டுமல்ல; நற்குணத்திற்கு இழுக்கும் வலிமை குறைவு, தீக்குணத்திற்கு இழுக்கும் வலிமை அதிகம் கண்ணு! இப்பொழுது தெரிகிறதா. உன் கேள்வி எப்படிப்பட்டது என்று?