பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38



மணி : ‘நீ ஒழுக்கத்திற் சிறந்தவன், உன்னுடன்தான் பழகவேண்டும் என்று என் தந்தை அடிக்கடி கூறுவதுண்டு அச்செல்வத்தை இன்றுதான் முழுதுங்கண்டேன்’ என்றான்.

முத்து : ‘நீயே செல்வத்தின் உயிர்! இயல்பாகவே செல்வத்திற் சிறந்த குடும்பம்! உன் தந்தையோ பெருஞ்செல்வர். நன்கு கற்றிருக்கிறாய். கேள்வி அறிவும் பெற்றிருக்கிறாய் ஒழுக்கத்திற்குப் புது உயிர் கொடுத்துப் போற்றுகிறாய்! உன்னை விட்டுச் செல்வம் வேறாக எங்கிருக்கும்?’ எனக் கூறினான்.

மணி : நண்பா! விளையாட வேண்டாம். ஒழுக்கத்திற்கு உறைவிடமாகிய உன்னிடமிருந்து எனது அறிவு இன்று புதிய ஒளியைப் பெற்றிருக்கிறது. இன்னும் சில ஐயங்களுக்குப் பதில் வேண்டும், தயவுசெய்து கூறு. ஒழுக்கத்திலும் சிறந்த செல்வம் உலகில் இல்லையல்லவா?

முத்து : ஆம்! மக்கட்பிறவிக்கு ஒழுக்கம் ஒன்றே சிறந்ததும், நிறைந்ததும், உயர்ந்ததுமான செல்வம் ஆகும். ஒழுக்கமற்றவர் ‘மக்கள்’ என்று ஆகார். அவரை மாக்கள் என்றே அறிஞர் அழைப்பர்.

மணி : ‘அப்படியானால், செவிச் செல்வத்தைச் செல்வம் என்றது எப்படி?’

முத்து : ஒழுக்கமுள்ள ஒருவருக்குத்தான் கேள்வியும் செல்வமாகும். ஒழுக்கமற்றவன் கேட்டென்ன? கேளாதிருந்தென்ன? ஒழுக்கமில்லாதவன் கேள்வியிருக்கிறதே, அது கேள்வி என்றாகாது; அது ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ என்றாகும்.

மணி : ‘அது சரி கல்வியைச் செல்வம் என்றது எப்படி?’

முத்து : ‘ஆம் : ஒழுக்கமுள்ளவன் கற்றதுதான் கல்வி ஒழுககமற்றவன் கற்றது கல்வியல்ல. அது நீர்மேல் எழுதிய எழுத்து!’