ஒட்டுமாஞ்செடி
கூடாது என்று கருதினேன்; கருதியது குற்றமா? கருத்தைத்தெரிவித்தேன் காரணத்தோடு; வேதனையை வெளிப்படுத்தினேன்; வெளிப்படுத்தியது குற்றமா? கொள்கையைக் கூறுவதும் குற்றமா? கூறுங்கள் தோழர்களே!
நான் மட்டுமல்ல; என் போன்ற பல தோழர்கள் பல தாய்மார்கள், பல கழகங்கள், பாட்டாளி மக்கள், தொழிலாளி தோழர்கள், பட்டி தொட்டி எங்கும் உள்ளோர் கூறினர், கூடாது இந்த ஏற்பாடு; திருமணம் என்ற பேச்சை விட்டு விடுங்கள், என்று.
பெரியார் திருமணம் என்ற செய்தி கேட்டதும் அழுதவன் நான், ஆயாசம் கொண்டவன் நான், அது மட்டுமல்ல, ஒதுங்கி விடுகிறேன் என்று எண்ணத்தை, கருத்தைத் தெரிவித்தவன் நான். பேதம், பிளவு, மனத்தாங்கல், மோதுதல் கூடாது, நல்லதன்று, என்று கருதும் போக்கு, மனப்பண்பு படைத்தவன் நான். எனவே என வரையில் பெருந்தன்மையாகக் கட்சிப்பணியிலிருந்து விலகுவது நல்லது என்று முடிவு கட்டியிருந்தேன்.
என் போன்ற பல தோழர்கள் பெரியாரை, பெரியார் போக்கை, அவர் திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை என்பதுமல்ல, கண்டித்தனர்; கதறினர்; வேண்டாம் என்று வேதனை நிறைந்த உள்ளத்தோடு.
நான் மனதார தீமை என்று கருதிய ஒன்றை, நல்லதல்ல என்று தெரிந்த ஒன்றை பகுத்தறிவுக்குப் புறம்பானது என்று பாமரரும் ஒப்பும் ஒன்றைத் தெரிவித்தது குற்றமா?
7