ஒட்டுமாஞ்செடி
பாற்பட்டுத் தமது போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறார், பெரியார். அவர் தலைமையில் வேலை செய்ய மனம் ஒப்பவில்லை; செயலாற்றும் வகை கிடையாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அவர் வகுத்த பாதையிலிருந்து அவரே தவறிவிட்டார்; தடுமாறிவிட்டார். தவறு என்று எடுத்துக் காட்டினோம்; நாம் மட்டுமா? நாட்டு மக்கள் அனைவரும். இயக்கம் பெரிது; இயக்கத்தின் கொள்கைகள் மிக மிகப்பெரிது. கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்; கொள்கைக்கு இழுக்கு வர விடமாட்டோம்; தவறு செய்தது தலைவரேயானாலும் கண்டித்திடத் தயங்கோம்; என்ற குரல், நாடெங்கும் கேட்டது; தலைவர் தம் வழியே செல்கிறார்; தவறை உணராது; சரியென்று சாதித்துக்கொண்டு; திராவிடர் கழகம் மூன்று மாதகாலமாகச் செயலற்றுக்கிடந்தது.
கழகம் கொள்கையில் வழுவாது
திராவிடர் கழகம் எதற்காகப் பாடுபட்டதோ, எவருடைய நன்மைக்காக, எந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்ததோ, அதே மக்களுக்காக, ஏழை எளியவர்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க, தாழ்ந்த மக்களை உயர்ந்தோராக்க, வாழ வழியற்ற மக்களுக்கு வாழ்க்கைப் பாதை வகுத்துக் கொடுக்க, இல்லாமையை இல்லாததாக்க, கொடுமையை ஒழித்துக்கட்ட "எல்லோரும் ஓர் குலம்" என்ற ஏற்பாட்டை வகுக்க, ஏற்படுத்தபட்டதோ, அதே கொள்கை வழி நின்று, குறிக்கோளைப் புறக்கணிக்காது பாடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகம்.
9