பக்கம்:ஒத்தை வீடு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 107 பெண். வெறும் உணர்வுகளால் ஆளப்பட்டவள். கெட்ட கெட்ட வார்த்தைகளை வாங்கிக் கொள்வதிலும், அவற்றைத் திரும்பிப் கொடுப்பதிலும் வல்லவள். எத்தனையோ பெண்களிடம், சில சமயம் ஆண்களிடமும் உதைபட்டுப் போனவள். கீழே விழுந்து கிடக்கும்போதும், எதிரிகள் முகத்தில் காலால் மண் வாரித் தூத்துவாள். அடிபட்டால் வலிக்கும் என்பதுதான் அவளுக்குத் தெரியும். அவமானமாயிற்றே என்பதை அறியாதவள்" "ஒரு தடவை, வழக்கம்போல் ஒரு சண்டை அம்மாவின் வாய்க்கு ஈடு கொடுக்க முடியாத ஒரு தடியன், அவன் பேர் ராமசாமி. எங்கம்மாவைப் பார்த்து, "நேத்துக்கூட பத்து ரூபா கொடுத்துட்டு ஒன்கிட்டே படுத்தேனடி.." என்று அபாண்டமாய்ச் சொன்னான். உடனே எங்கம்மா, அவனுடைய மனைவியின் 'வைப்பாளன்களை பட்டியல் போட்டுச் சொன்னாள் அவ்வளவுதான். ராமசாமி, அம்மாவை மல்லாக்கத் தள்ளினான். அவன் பெண்டு பிள்ளைகள், அம்மாவின் கால், கைகளைப் பிடித்துக் கொள்ள, ராமசாமி, ஒரு கூர்மையான கல்லை எடுத்து, அம்மாவின் நெற்றியில் இடித்தான். அம்மாவுக்கு மயக்கம் வரும்வரை குத்தினான். என் அம்மாவின் நெற்றியில் இப்போதுகூட அது பள்ளத்தாக்காய் கிடக்கிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம் இப்போதுகூட அந்தப் பள்ளத்தில் ஒரு கோரக் காட்சி எனக்குத் தென்படும். அப்போது எனக்கு வயது பன்னிரண்டு இருக்கலாம். ராமசாமியின் பிடறியில் அடிக்கப் போனேன். உடனே, அவன் பெரிய மகன் என்னைக் கீழே தள்ளி, வாயில் மண்ணைப் போட்டு, கை முஷ்டியால் இடித்தான். இந்தச் சமயத்தில், அப்பா வந்தார். பரமசாது. "என்னை அடிக்கிறதப் பார்த்துட்டு நிற்கிறியே. நீயும் ஒரு ஆம்பிளையா?” என்று அம்மாவிடம் வாங்கிக் கட்டும் பரம சாது. அதோடு பூஞ்சையான ஒல்லி உடம்பு" "ஆனாலும், அந்தச் சாதுக்குக் காடு கொள்ளாச் சினம் பொங்கியது. என் மார்பில் உட்கார்ந்திருந்த ராமசாமியின் மகனை மல்லாக்கத் தள்ளினார். ஒரு கல்லைத் தூக்கி, அம்மாவை ரத்தக் காடாக்கிய ராமசாமியின் மேல் போடப் போனார். அதற்குள், அந்த ஒற்றை மனிதர் அடிபட்டதே மிச்சம். பத்துப் பதினைந்து பேருக்கு மத்தியில் சுருண்டு விழுந்தார். ரத்தமும் சதையுமாய் மயங்கிக் கிடந்தார். அப்போதுதான், புல்லுக்கட்டுடன் வந்த அக்கா காந்தாமணி, ஒப்பாரியுடன், வாயிலும் வயிற்றிலும் அடித்தபடியே, ஐந்து கிலோமீட்டர் தொலைவு போலீஸ் நிலையத்திற்குப் போனாள் போலீஸ் வந்தது. கோபத்தோடு வந்தவர்கள், குணத்தோடு போனது. ராமசாமிக் குடும்பம் கொடுத்த அடியில் 'வர்மம் ஏற்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போன அப்பா, ஒரு வருடத்தில் ஒரேயடியாய் முடங்கி விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/108&oldid=762159" இலிருந்து மீள்விக்கப்பட்டது