பக்கம்:ஒத்தை வீடு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 169 “நாயை குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும், அது காளு காளுன்னு கத்துற புத்திய விடாதாம். பால் எங்கேடா. பை எங்கேடா." செல்வா, தட்டுத் தடுமாறி பதில் அளித்தான். அதில் முன்னெச்சரிக்கையும் உள்ளடங்கி இருந்தது. புரைதீர்ந்த பொய்யே மெய்யாய் பேசியது. "போகிற வழியில் மயங்கி விழுந்துட்டேன் சித்தி. இன்னும்கூட மயக்கம் முழுசா போகல சித்தி." சித்திக்காரி, அப்போதுதான் அவனை ஏற இறங்கப் பார்த்தாள். செல்வா முகத்தில் கடிக்காயங்கள். கைகளில் சிறாப்புக்ள். கழுத்தில் நகக் கீறல்கள். கண்கள் பசுமையற்ற தரிசு நிலமாய் தோன்றியது. சட்டைப் பித்தான்கள் முன்னுக்குப் பின் முரணாக மாட்டப் பட்டிகுந்தன. மனச் சிதைவுகளை மறைக்க முடிந்த தன்னால், இந்த உடல் சிதைவுகளுக்கு எப்படி விளக்கம் அளிப்பது என்று அவன் குழம்பியபோது, சித்தியின் கேள்வியிலேயே பதில் கிடைத்தது. அவள் குரல் கனிவாக வரவில்லையானாலும், காய்ப் பழுப்பாய் ஒலித்தது. "முள்ளுச் செடியில விழுந்திட்டியாடா." "ஆமாம். கருவேல முள்ளுச் செடி.." "எப்போ நடந்தது." "எது?” "உனக்கு கிறுக்கு புடிச்சுட்டா. எப்போ மயங்கி விழுந்தன்னு கேட்டேன்." "பால் வாங்கிட்டு வரும்போதுதான் சித்தி, ஆவின் வேன் லேட்டா வந்துது. பால் வாங்கிட்டு வரும்போதுதான் மயங்கி விழுந்துட்டேன்." "பால் கிடக்கட்டும். பால் கார்டு எங்க?" "எனக்கே தெரியல சித்தி. எப்படி நடந்ததோ... என்ன நடந்ததோ..." "சரி விழுந்த இடத்தையாவது காட்டித் தொல." "அதோ அந்த முனையில முள்ளுச் செடி குவியல் இருக்குதே. அதுலதான் சித்தி." "சரி நீயும் வா. தேடிப் பார்க்கலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/169&oldid=762226" இலிருந்து மீள்விக்கப்பட்டது