பக்கம்:ஒத்தை வீடு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஒத்தை வீடு மகிழ்ச்சியுடன், அக்காவைப் பார்த்த எதிர்பாராத மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, காந்தாமணி அக்காவை ரெட்டிப்பு மகிழ்ச்சியுடன் பார்த்தான். மனைவியைக் கண்களால் தேடிப் பார்த்தான். கண்ணில் படவில்லை. மீண்டும் அம்மாவை விட்டு விட்டு அக்காவையே பார்த்தான். அவள், தான் வந்தது தம்பிக்கு பிடிக்கவில்லையோ என்று அனிச்சமலராய் ஆகும் வரை பார்த்தான். அப்புறம்தான் பேசினான். "எப்போக்கா வந்தே...?" "இன்னிக்கு காலையிலதான்." "அறுவடை சமயம். அடைமழை நேரம். ஏன் இப்படி திடுதிப்புன்னு." "நான் சொல்லாமல் கொள்ளாமல் வரப்படாதா..?" "ஒம்மா புத்தி. ஒன்னை விட்டுப் போகுமா... நிலத்தை வித்துட்டோ விற்காமலோ என்னோட தங்கிடுன்னு சொல்றவன் நான்?" இதற்குள், "என் புத்தில என்னடா கண்டே" என்று முற்றத்து மேல் திண்ணையில் நின்ற சொர்ணம்மா, வீதிக்கே ஓடிவந்தாள். அறுபத்தைந்து ஆண்டுகளைக் கொண்ட மொக்கையான முகம். கண், வாய், மூக்கு, காது ஆகியவை அந்த மொக்கையில் தனித் தனியாய் ஒட்டப்பட்டது போன்ற தோற்றம். பின் நெற்றி முன் தலையை ஆக்கிரமித்தது போல் பொட்டல். அதில் ஒரு பள்ளம் . பள்ளத்தாக்கைச் சுற்றிய மரங்கள் போல், அந்தப் பள்ளத்தைச் சுற்றிய முடிக் கற்றைகள். காந்தாமணி, தம்பியிடம் இருந்த சூட்கேஸையும், ஜோல்னாப் பையையும் வாங்கிக் கொண்டிந்த போது, சொர்ணம்மா அங்கேயே, அந்த நிமிடமே ஒப்பித்தாள். "ஊர்ல. ஆறு மாசமா பேச்சு மூச்சி இல்லாமக் கிடந்த பாவிப் பயலுவ.. பழையபடியும். புத்தியக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்களாம். அக்காவோட நிலம் இருக்கு பாரு. மூணு மரக்கால். நாலு செண்டு. அசல் பட்டா இடம். அதுல வண்டிப் பாதை வேணுமுன்னு ஊர்க்காரனுவ கேட்டாங்களாம். அக்கா, பட்டா நிலமுன்னு சொல்லியும் கேட்காமல், ஊர்க்காரனுவ வண்டி அடிக்காங்களாம். நிலத்துல முளைச்ச காணப் பயிருல்லாம் கரையான் புத்தாய் ஆகிட்டாம். அவங்க நாசமாப் போகணும். போன இடம் புல்லு முளைச்சுப் போக நீதான் பழையபடியும் பெரிய இடத்துல சொல்லணும். இந்தத் தடவை. அவங்க காலுல கையில விலங்கை மாட்டி. போலீஸ் இழுத்துட்டுப் போறதுக்கு, நீ ஏற்பாடு செய்யணும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/17&oldid=762227" இலிருந்து மீள்விக்கப்பட்டது