பக்கம்:ஒத்தை வீடு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 புதைமண் செல்வா, தன்னையே சித்தி பார்த்துக் கொண்டிருப்பதை ஓரக் கண் போட்டுப் பார்த்தான். அவசர அவசரமாக கத்தரிக்காய் சாம்பாரை வெள்ளை சாதத்தில் பிசைந்து இலை தளை கலவையாக்கி ஒரு கவளத்தை வாய்க்குள் கொண்டு போனான். அவனை அறியாமலேயே வாய்க்குள் சோறு போனபோது, மத்தியானம் நடந்தது சோற்றோடு கலப்படமானது. குமட்டிக் கொண்டு வந்தது. இதற்குள் சித்திக்காரி, தானும் நல்லவள்தான் என்ற நினைப்போடு திருப்தியோடு போய்விட்டாள். அவள் போனதும் செல்வா, பத்து நிமிடம் வரை சோற்று தட்டையே வெறித்துப் பார்த்தான். பின்னர், முன்னெச்சரிக்கையாக, கதவை தாளிட்டுக் கொண்டான். மேற்குப் பக்கமாக உள்ள ஜன்னல் வழியாக ஒவ்வொரு கவளமாக எடுத்து வெளியே வீசினான். ஒரு பக்கம் வீசினால், வாசல் பெருக்கும் வேலைக்காரம்மாவுக்கு சந்தேகம் வரலாம் என்று நினைத்ததுபோல், இன்னொரு பக்க ஜன்னல் வழியாக எஞ்சியவற்றை பன்னீர் தெளிப்பதுபோல் அங்கு மிங்குமாய் வீசினான். முழுமையான முட்டையை கசக்கி சிதைத்து வெளியே வீசியபோது, சித்தியின் உழைப்பை வீணாக்குவது போன்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. பின்னர், உச்சி முதல் பாதம் வரை மூடிக் கொண்டு உருத் தெரியாமல் கிடந்தான். இரவு பத்து மணி அளவில் வந்த சித்தப்பா சிவனுப்பாண்டி, காலையில் காபியோடு அவனை எழுப்பினார். உடம்புக்கு என்னடா என்று கேட்டபடியே, காபி டம்ளரை அவன் பக்கம் நீட்டினார். தாட்சண்யம் கருதியும், சித்தப்பா மீது வைத்திருக்கும் பய பக்தியாலும் அந்த காபியை குடிக்கப் போனான். மீண்டும் குமட்டல். ஒரு சொட்டு காப்பியும் உதடோரத்தில் நீர்க் கோடுகளாய் வெளிப்பட்டன. ஒல்லியானாலும் சாட்டைக் கம்பு போல் உறுதியான உடல் படைத்த சித்தப்பா பதறியபடியே கேட்டார். "என்னடா செய்யுது." "சாப்பிடவோ குடிக்கவோ நினைத்தால் வாந்தி வருவது மாதிரி இருக்குது சித்தப்பா என்னால உங்களுக்கும், சித்திக்கும் சிரமம் சித்தப்பா.” "எங்கண்ணன் - அதான். உங்கப்பா எனக்காக பட்டிருக்கிற சிரமங்களில இது ஆயிரத்துல ஒண்ணாக்கூட வராது.டா. வயிறு எதையும் ஏற்க மாட்டேங்குதுன்னா, அது மஞ்சள் காமாலையாய் இருக்கலாம். லட்சுமி. கொஞ்சம் வாயேன். "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/174&oldid=762232" இலிருந்து மீள்விக்கப்பட்டது