பக்கம்:ஒத்தை வீடு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 203 பொதுவாக இல்லை. இந்த மனோதத்துவ விதிப்படியோ என்னமோ, செல்வா வாடும் அல்லது வாட்டப்படும் வீட்டிற்கு ஏதாவது ஒரு சாக்கில் போயாக வேண்டும். போவது நிச்சயம். சாக்கு என்னவென்றுதான் புரியவில்லை. பொய் வேடம் போடும் மெய்மைக்கும், சகவாச தோசத்தில் "புரைதீர்ந்த" பொய், வாங்காமலே வந்துவிடுகிறது. அப்பா, அம்மாவை முந்திக்கொண்டு ஒருநாள் முன்னதாக வந்த அவள், இப்போது வீட்டிற்குள் ஓடினாள். பள்ளியில் வகுப்பு பரீட்சை என்று தந்தையின் அனுமதியோடு வந்தவள், அங்கு பிரிட்ஜியில் வைத்தியிருந்த பால் பாக்கட்டுகளை வெயிலில் போட்டாள். அது ஈரம் உலர்வது வரைக்கும் காத்திருக்க முடியாமல், தவித்தாள். கூடவே ஒரு கற்பனை. இன்று வீட்டில் யாருமில்லை. இன்றைக்கு செல்வாவை வீட்டிற்குள் அழைத்து, ஆசை தீராமலே அனைத்து, சுவை தீராமலே பேசி, தனது டுர் அனுபவங்களை சொல்ல வேண்டும். அதற்காகத்தான் முந்திக் கொண்டு வந்தவள். அரைமணி நேரம் கழித்து, பால் பாக்கட்டுகள் கையை குளிர்விக்காமல் சூடாக்கியதில், அவள், குளிர்ந்து போனாள். ஒரு எவர்சில்வர் தட்டை எடுத்தாள். அது கண்ணாடி பளபளப்பில் சூரிய ஒளி கற்றைகளை பிரதிபலித்து, அதன் மேலுள்ள ஆப்பிள் பழங்கள், சப்போட்டா பழங்களில் மின்னி, அதிலிருந்த தூக்குப் பையில் ஊடுறுவியது. கவிதா, காலிங் பெல் குரலோடு "ஆன்ட்டி ஆன்ட்டி" என்று சொந்தக் குரலையும், கொடுத்தபோது, தாளிட்ட கதவு தானாய் திறந்தது. சலிப்போடு வெளியே வந்த சித்திக்காரி லட்சுமி, அவளை பார்த்ததும், சிறிதுநேரம் அப்படியே நின்றாள். வாராத மாமணி வந்ததுபோல், வாயகல நின்றவள், பிறகு வாயெல்லாம் பல்லானாள். உணர்வுகளுக்கு வார்த்தைகளால் ஒலி வடிவம் கொடுத்தாள். "என் கண்ணையே நம்ப முடியவில்லையே! ஒரு நாளும் வராத திருநாளா வந்திருக்கே? உன் கால் படுறதுக்கு இந்த வீடு பாக்கியம் செய்திருக்கு உள்ளே வாம்மா." கவிதா, உள்ளே வந்தாள். சித்தி, துரசியும் தும்புமாய் கிடந்த ஒரு நாற்காலியை, தனது முந்தானையை துடைப்பமாக்கி, துடைத்துவிட்டு, கையும் ஓடாமல், காலும் ஓடாமல் நின்றாள். பெரிய இடத்துப் பெண். இவள் வீட்டுக்காரரை பார்த்தாலேயே தொடை நடுங்க வைக்கும் அந்தஸ்திலிலுள்ள ஒரு பெரிய அதிகாரியின் மகள். சித்திக்காரி, வார்த்தைகள் வராமல் உளறிக் கொட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/203&oldid=762264" இலிருந்து மீள்விக்கப்பட்டது