பக்கம்:ஒத்தை வீடு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 211 தீண்டியதும், அவனைத் தீண்டியதும் ஒரு பெருஞ்சுகம். அவற்றின் முன்னால், இவள் கொடுத்தவை சின்னஞ்சிறு சுகங்கள். அந்த மோகனனின் பாட்டுக்கு முன், இவள் கெஞ்சலும்கொஞ்சலும், சிணுங்கலும் குலுக்கலும் அற்பமாகின்றன. ஆனாலும், அவளையும் உதற முடியவில்லை. இவனுக்கு சுமை தாங்கியாக இருந்தவள். இவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்தவள். சிறுமையில் சுருங்கிப் போன இவனை, பெருமைப்படுத்திய அவளை, இவன் சிறுமைப் படுத்திவிட்டான். ஆனாலும், அவள்தான் அதற்குக் காரணம் நேற்று வந்ததுபோல், டுருக்கு போவதற்கு முன்பு, ஏதாவது ஒரு சாக்கில், தான் போகப்போவதை சொல்லியிருக்க முடியும். ஒருவேளை, அண்ணனுக்கு இவளே தன்னை கூட்டிக் கொடுத்தாளோ என்னமோ? இப்போதைய நிலமைக்கு இவளே காரணம் இவளே வில்லி. செல்வா, மல்லாந்து புரண்டான். இதனால், குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள், அவன் முதுகிற்குள் சிக்கின. சுபேதா, அவன் முதுகோர இடுக்குகளிலிருந்து, நோட்டை மீட்பதற்கு போராடியது போது, செல்வாவின் மனம் கிராமத்திற்கு போனது ஏரிக்கரையில் ஏழெட்டு நண்பர்களோடு சிரிப்பும் கும்மாளமுமாய் நடந்து, அந்த ஏரியால் பெருக்கெடுத்த கிணறுகளில், அந்தர் பல்டி அடித்தது, குற்றாலத்திற்கு போன குளியல் நினைவுகள், மாலையில் நண்பர்களோடு சேர்ந்து விளையாடிய வாலிபால் விளையாட்டு, பம்பு செட் நீரில் அருவியாய், ஏகாந்தமாய் குளித்தது, வெட்டை வெளி பசும்புல் தரையில் ஏகாந்தமாய் படித்தது; படுத்தது, வகுப்புக்களில் முதலாவதாக வந்தது. இங்கேகூட கல்லூரியில் ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில், ஏதோ ஒரு வகையில் ரேங்கில் வந்தது. இப்போது நான்கைந்து நாட்களாக கல்லூரிக்குப் போவதுபோல் போக்குக்காட்டி, அடையாறு, குழந்தைகள் பூங்காவிற்குப் போய், தன்னந்தனியாய், தனி மரமாய், மரங்களோடு மரமாய் நின்றது; படுத்தது; புரண்டது எழுந்தது; அலைந்தது: கிராமத்தில் முறைப்பெண் ஒருத்தி அவனை வம்புக்கு இழுத்தது: இவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒடிப்போனது; ஊரில் கிடைத்த நல்ல பையன் பட்டம். இப்போது அந்த அறைக்குள், பழையதையும் புதியதையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு இறுதியில் செல்வா மனதளவில் செத்துப் போய்க் கிடந்தான். ஒரு வாலிபனுக்குரிய ஆண்மை, நூலறுந்த காற்றாடியாய் சுற்றுகிறது. இப்போது காதலனும், காதலியும் இவனே. இவன் காதலனாகும்போது, மோகனன் காதலி ஆகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/211&oldid=762273" இலிருந்து மீள்விக்கப்பட்டது