பக்கம்:ஒத்தை வீடு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 புதைமண் முதலுமாய் நன்றிக் கடன் செலுத்திட்டேன். வாங்குன வரதட்சணை பணத்தை அப்படியே அண்ணன் கிட்ட ஒப்படைத்தேன். உன் பெரிய அக்காவுக்கு, நானே நகை போட்டு மதுரையில் கல்யாணம் செய்து வச்சன். சின்னக்காவுக்கும் கொஞ்சம் உதவுனேன். இதையெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, கணக்கு சரியாயிட்டு. நீ எங்கப்பா சித்தப்பர்வ படிக்க வச்சாரு. அதனால சித்தப்பா, 'நம்மள படிக்க வைக்க வேண்டியது அவரோட கடமை. அப்படின்னு, நீ நினைக்கக்கூடாதுன்னு சொல்றேன். இந்த வீட்ல இருந்து படிக்கக்கூடாதுன்னு சொல்லல. உன்னை தர்மத்துக்காக படிக்க வைக்கேன். இதை நீ புரிஞ்சுக்கணும்." இடையிலே, ஒரு இடைச்செறுகலாக சித்தியின் குரல். "எம்மாடியோ.. எனக்குத் தெரியாம, இவ்வளவும் நடந்திருக்கா..? உங்க அண்ணன், உங்கள நல்லாத்தான் மயக்கி ஒட்டாண்டி ஆக்கிவிட்டிருக்கார். பெரிய குடும்பமாயிருக்கு. யோசித்து செய்யுங்கன்னு’, எங்கம்மா, எங்கப்பாகிட்ட சொன்னது சரியாப்போச்சு" சித்தப்பா சிவனுப்பாண்டி, அண்ணன் மகனிடம் தொடர்ந்து பேசுவதா அல்லது மனைவியை அடக்குவதா, என்று புரியாமல் தவித்தபோது, சித்திக்காரி தொடர்ந்தாள். "உங்க அண்ணனுக்காவது புத்தி வேணும். 'உன்ன நம்பி வந்திருக்கிற பெரிய இடத்து பெண்டாட்டிய பூ மாதிரி நடத்துணுன்டான்னு புத்தி கெட்ட உங்களுக்கு புத்தி சொல்லியிருக்கணும். அந்த மனுஷன் பெரிய மனுஷனாம், பெரிய மனுஷன். ஒரே அடியா மொட்டை அடிச்சுட்டார்." சிவனுப்பாண்டி, முதல் தடவையாக மனைவியை நோக்கி, கையை ஓங்கினார். பிள்கைள் மட்டும் அந்த கையை எம்பிக் குதித்து பிடிக்கவில்லை என்றால், இந்நேரம் அவள், இந்த சாதுவின் கோபத்தை தாங்க முடியாத, காடாய் சரிந்திருப்பாள். அதற்குள், செல்வா துள்ளி எழுந்தான். மிரட்டல் பார்வையோடு சித்தி அருகே சென்றான். "சித்தி. எங்கப்பா பற்றி இதுக்குமேல ஏதாவது சொன்னிங்க. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது." "ஒஹோ, அந்த அளவுக்கு வந்துட்டியா. ஒரு நாளும், கை நீட்டி அறியாத மனுஷன, கையை ஓங்க வச்சுட்டே. இப்போ நீ வேற, அடிப்பேன் என்கிற அர்த்தத்துல சொல்றியா. வேணுமுன்னா அடிச்சுட்டுப் போப்பா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/214&oldid=762276" இலிருந்து மீள்விக்கப்பட்டது