உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

233

“இப்போ உனக்கு வயசு எட்டு. தோட்டத்துக்கு போற... யாரோடு போறே...?”

“எங்க மாமா மகன் குமாரோட போறேன்.”

“தோட்டத்துல என்ன செய்றீங்க?”

“பரணுல ஏறி காக்கா குருவிகளை கல் கட்டுன கயிற்றுக் கம்பை சுழற்றி சுழற்றி துரத்துறோம்.”

“அப்புறம்?”

“அம்மா அப்பா விளையாட்டு விளையாடினோம்.”

“அப்படின்னா?”

“கொஞ்ச நேரம் அவன் கீழே படுப்பான். நான் மேல் படுப்பேன். அப்புறம், நான் கீழே படுப்பேன், அவன் மேலே படுப்பான்.”

“அப்புறம்?”

“அவனுக்கு குழந்தை பிறக்கிறது மாதிரி ஒரு பொம்மையை எடுத்து ரெண்டு பேருக்கும் மத்தியில் போட்டுக்கிறோம். அதைத் தாலாட்டுறோம். கொஞ்சுறோம்... குலாவுறோம்...”

“இந்த மாதிரி, அப்பா-அம்மா விளையாட்டுக்கள நீங்க மட்டும்தான் செய்வீங்களா? இல்ல எல்லாரும் செய்வாங்களா?”

“மத்த பசங்க எங்களைவிட மோசம். ஆடு, மாடுன்னு அதுங்க மேல ஏறி, அட்டூழியம் பண்ணுவாங்க.”

“அப்போ நீ அவங்களைவிட மேலு... சரியா?”

“சரிதான்.”

“எல்லாக் குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் செய்கிற, இந்த மாதிரி காரியம், சிறுபிள்ளை விளையாட்டு. இதை பெரிசா எடுத்துக்க கூடாது. எடுத்துக்குவியா?”

“மாட்டேன்.”

டாக்டர் சத்தியா, சிறிது இடைவெளி கொடுத்தாள். அவனையே உற்றுப் பார்த்தாள். மீண்டும் ஆணைக்குரலில் பேசினாள்.

“இப்போ உனக்கு பதினெட்டு வயசு. உங்கப்பா சீட்டு போட்டு நொடித்திட்டார். ஆனாலும், நிலம், புலனை விற்று சீட்டுப் பணத்தை கொடுத்திட்டு என்ன செய்யுறார்?”

“ஒரு பெட்டிக் கடைக்குள் சிறைபட்டு கிடக்கார்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/233&oldid=1839267" இலிருந்து மீள்விக்கப்பட்டது