சு. சமுத்திரம்
27
நீர்க் குமிழிகளா... வேர்வைக் குமிழிகளா... அல்லது இரண்டு வகையுமா... அவனுக்கே தெரியாது... ஆனாலும் தெரிந்தெடுத்த அந்த மாலையைப் பற்றி அவன் விளக்கினான்...
“தெருவுல விற்கிற பாசி மாலையை வாங்கிட்டு வந்ததாய் நினைக்காதே சங்கரி... இதோட விலை... மூவாயிரம் ரூபாய்... டி.ஏ. அட்வான்ஸ்ல பாதிப் பணம்... புதுதில்லியில் இருந்து, பீல்டு விசிட்டாய் ஹைதராபாத் போயிருந்தோம்... அப்போ சார்மினார் பார்க்கப் போனோம். அதன் சுற்று வட்டாரத்தில் பெரிய பெரிய முத்து மாலைக் கடைகள்... அத்தனையும் ஒரிஜினல் முத்துக்கள்... ஏமாந்துட்டேன்னு நினைக்காதே... என்னோட தெலுங்கு சகாக்களைக் கூட்டிக்கிட்டு போய், சலுகை விலையில் வாங்கின மாலை... விற்பனை வரியைத் தள்ளுபடி பண்ணிட்டாங்க... ஆனால் ரசீது தர்ல...”
“எனக்கு என்னமோ... இது போலி மாலையாய் இருக்குமோன்னு...”
“என்னை இப்படி நோகடிக்காதே சங்கரி...”
“ஸாரி... முத்துக்கள் போலியாய் இருந்தாலும் தங்கச் சரடு இருக்குதே... அது போதும். அதோட, நீங்க சொல்றது சரிதான்... மணக்காத குறையைத் தவிர... மற்றபடி நல்ல மாலைதான்... இதை நான் வெறும் மாலையா நினைக்கல அத்தான்... ஒங்க அன்பின் அடையாளமாவே நினைக்கேன்... ஆனாலும் காசை இப்படி கரியாக்கப்படாது... காலையில் இருக்குது ஒங்கம்மாவோட பூஜை... அவங்களுக்கு ஒரு புடவை எடுத்துட்டு வரப்படாதா... எப்படில்லாம் திட்டப் போறாங்களோ...”
“எடுத்துட்டு வருகிற புடவைக்கு... எத்தனையோ குறை சொல்ற கேஸு... இந்த முத்து மாலை விலையைக் கேட்டால்... மயக்கம் போட்டுடுவாள்... அதனால நாம் உண்மையைச் சொல்லப்படாது...”
“அண்ணிகிட்ட சொல்லாமல் இருக்க முடியுமா? அவங்க தண்ணீருக்குள்ளேயே தடம் பார்க்கிறவங்க...”
“எப்பா... ஒன்கிட்ட வாய் கொடுத்து மீள முடியுமா... நீ இங்கே அடிக்கிற லூட்டி... வெளியில யாருக்குமே தெரியாது...”
சங்கரி, மெல்லச் சிரித்தபடியே, அந்த முத்து மாலையை விரிவாக்கி, அதற்குள் தலையை நுழைக்கப் போனாள். மனோகர், அவளது கரங்களைப் பற்றிச் செல்லமாகச் சொன்னான்...
“நீயே மாட்டிக்கப் போனால்... என்ன அர்த்தம் சங்கரி... நான் ஒருத்தன் எதுக்காக இருக்கேனாம்...?”