பக்கம்:ஒத்தை வீடு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 35 முன்பே எழுந்திருக்கும் சங்கரி, அப்படியே தூக்கத்தில் லயிக்கப் போவதுபோல் உடம்பில் எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தாள் அவனோ, பாதாதி கேசம்வரை, மூடிக் கிடந்தான். என்றாலும், வெயில் உறைத்தபோது, சங்கரி கடமைக்காக எழுவதுபோல் எழுந்தாள். கண்களை முந்தானையில் துடைத்த படியே, கணவனைப் பார்த்தாள். அவனை எழுப்பப்போன கரங்களை குறுக்கி கொண்டாள்; எரிந்த கண்களை கசக்கியபடியே, வெயில் தெறித்த மாடிப்படிகளில் இறங்கினாள். இதனை நல்ல சகுனமாக அனுமானித்த அண்ணி காந்தாமணி, அடுத்த பத்தாவது மாதத்தில் ஒரு நல்ல குழந்தையை ஏந்தலாம் என்பது போல் தன் கைகளைப் பார்த்தாள். மைத்துணியின் கண்ணில் படும்படியாய் படிக்கட்டுக்கு அருகே நின்றாள். ஆனால் சங்கரியோ அப்படி ஒருத்தி நிற்கிறாள் என்று அங்கீகரிக்காமலேயே, சமயலறைக்கு எதிர் பக்கமாய் உள்ள பூஜை அறைக்குள் நுழைந்தாள். சுவர் முழுக்க தெய்வப் படங்கள். முருகன். பிள்ளையார் அய்யப்பன். அனுமான். அம்பாள். அஷ்டலட்சுமிகள். மூன்றடித்துக்கலில் உள்ள பீடத்தில் பித்தளை உருவ வேல் முருகன், பக்கத்தில் அம்மை அப்பன். முகத்தோடு முகம் போட்ட சிவ பார்வதி. அந்த சிவசக்தியை சங்கரி வெறித்துப் பார்த்தாள். வெறுப்பாய் பார்த்தாள். அதைப் பார்க்க மனதில்லாமல் கண்களை மூடினாள். அதுவே படிப்படியாய் தியானமானது. தீபம் ஏற்ற மறந்தவளாய்த் திக்கற்று நிற்பவள்போல் நின்றாள். இதற்குள், சமையல் அறையிலிருந்து வெளிப்பட்ட மாமியார் சொர்ணம்மா, பூஜை அறையைப் பார்த்தபடியே பின்பக்கமாய் நகர்ந்து, மகள் காந்தாமணியின் மீது முட்டினாள். மகளின் நெற்றியில் தனது பல்பட்ட இடத்தை தடவி விட்டபடியே, முகத்தை ஒரு குலுக்கு குலுக்கி, சலிப்போடும் சத்தமாகவும் கத்தினாள். "இவளுக்குக் கொஞ்சமாவது ஒரு இது இருக்குதா. சுத்த பத்தம் இல்லாம எப்படி பூஜை அறைக்குள் போகலாம்.? நல்ல பொண்ணாப் பாத்து என் தலையிலே கட்டிட்டே தடிமாடு." காந்தாமணி, அம்மாவின் வாயில் ஆள்காட்டி விரலை வ்ைத்து, அதை அடைத்தாள். அவளுக்கு ஏதோ ஒன்று தட்டுப்படுவது போல் இருந்தது. இந்த சங்கரி சுத்த பத்தமில்லாமல் பூஜை அறைக்குள் போகிறவள் அல்ல. திண்ணையில் நடந்தாள் கூட காலைக் கழுவிவிட்டு சாமி அறைக்குள் போகிறவள் அப்படி நடந்திருந்தால், இப்படிப் போகமாட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/36&oldid=762327" இலிருந்து மீள்விக்கப்பட்டது