பக்கம்:ஒத்தை வீடு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 37 விடம் சொல்லியே தீருவது என சங்கரியைப் பின் தொடர்ந்த உமாவை, காந்தாமணி இழுத்துப் பிடித்து கொல்லைப் பக்கம் கூட்டிப்போனாள். இருவரும் பத்து நிமிடத்திற்கு மேலாக வாய் உரச, காது உரச நின்றார்கள். உமா, காந்தாமணியிடம் சில குறுக்குக் கேள்விகளைக் கேட்டு, தலையாட்டினாள். பிறகு காந்தாமணியைப் போகும்படி சமிக்ஞையிட, அவளும் பூனைபோல் காலடிச் சத்தம் எழுப்பாமலேயே சமையலறைக்குள் வந்தாள். கொல்லைப் பக்கம் உமா கூவினாள். "சங்கரி ஏய் சங்கரி. இங்க வாயேன்." சமையலறையில், மாமியாருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்த சங்கரி, சொர்ணம்மாவை மவுனமாய்ப் பார்க்க, அவளோ, "அவளுக்கு வேற வேலையில்ல." என்றாள். அவள் தன் மாமியாரைப் பற்றி அவதூறு கிளப்புவதுபோல், இவளும், அவளிடம் தன்னைப் பற்றிக் கிளப்பி விடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை. ஆனாலும், அங்கே வந்த காந்தாமணி, குறுக்கே புகுந்து, "கூப்பிடறாள் பாரு. என்னன்னு கேளு. அதான் மரியாதை. உன் வேலய நான் பாக்கேன்." என்று சொன்னபடியே, சங்கரியின் முதுகைப் பிடித்துச் செல்லமாகத் தள்ளினாள். அவள் பின்வாசலைத் தாண்டியதும், அம்மாவுக்கு உதவியாளாய் ஒத்தாசை செய்யாமல், கொல்லைப்புற பின் கதவை பாதி சாத்தி, அதற்கு பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள். அந்தக் கொல்லை, பூந்தோட்டமாகவும், குட்டித் தோப்பு போலும் மின்னியது. குடை விரித்தாற்ப் போன்ற மா மரங்கள். நிமிர்ந்து நின்ற கொய்யா மரங்கள். வாழைப் பூவை உரசிய தென்னங்கன்று. ஒன்றை ஒன்று பின்னிக் கொண்ட செவ்வரளி. மஞ்சரளிச் செடிகள். ராட்டினம் போல் பூக்கும் பெங்களுர் அரளி மரம் . தரை மெத்தையான புல் பிறப்புக்கள். அணில்களின் ஆரவாரங்கள். பின்பக்கத்திற்குத் திரையிட்டது போன்ற அசோக மரங்கள் அவற்றின் முக்காடு போட்டத் தோரணை. ஆங்காங்கே அழகு காட்டிய பூக்களில் கிடந்த சருகுகளை எடுத்து கீழே போட்டபடியே, சங்கரி, உமாவை நெருங்கினாள். என்ன என்று கேட்காமல், அந்த வார்த்தைக்குப் புன்னகை வடிவம் கொடுத்தாள். அதற்குள் உமாவுக்கு வந்த காரியத்தைவிட சொந்தக் காரியமே முக்கியமாய்ப்பட்டது. "சங்கரி எனக்கு அந்த மாங்காயப் பறிச்கக் கொடேன்." "உனக்கு இல்லாத உரிமையா. நீயே பறிச்சுக்க வேண்டியது தானே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/38&oldid=762329" இலிருந்து மீள்விக்கப்பட்டது