பக்கம்:ஒத்தை வீடு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

73

எஸ்.பி... இவனை ரொம்பப் பிடிக்கும் 'டா' போட்டுத்தான் பேசிக் கொள்வார்கள். அவனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், ராமசாமிக்கு விலங்கு. அம்மாவுக்கு கொண்டாட்டம். அக்காவுக்குத் துக்கக் குறைவு.

அந்த ஐ.பி.எஸ் நண்பனிடம் அக்கா சந்திக்கும் அநியாயமான அடாவடியை சொல்வதற்காக அவன் சாலையின் மறுபக்கம் போகப் போனான். அதற்குள் இன்னொருத்தி அவள் பார்த்த விதமே பன்னீர் தெளிப்பது போல் இருந்தது. அவளை முண்டியடித்து நடந்து, முதுகில் முட்டப் போவதுபோல் தொடர்ந்து, அவளுக்கு முன்னால் நடந்து, திரும்பித் திரும்பிப் பார்த்தான். அவள், தனக்கு இணையாக வரும் வரை நின்றான். இணையாகவே நடந்தான். குரலைக் கனைத்தான் செருமினான். அவளுக்குச் செய்தி கிடைத்தது. பதில் செய்தி கொடுத்தாள் ‘ஏண்டா சோமாறி. கூடை வச்சுருக்குற பொண்ணுன்னா கூட வந்துருவான்னு அர்த்தமா. அதோ சைக்கிள்ல வர்றார். நீ ஆம்பளையா இருந்தா நில்லு. நில்லுடா.

மனோகர், நிசமாகவே ஓடினான் சைக்கிள் மணிச்சத்தம் கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் அலறினான். திரும்பிப் பார்த்தால், அவளைச் சுற்றி ஒரு சின்னக் கூட்டம். பக்கத்தில் சைக்கிள். மனோகர் பதறியடித்து ஓடினான் சந்து பொந்து இல்லாத நெடுஞ்சாலை ஒளியக் கூட இடமில்லாத பெரிய பெரிய கட்டிடங்கள். கூர்க்காக்கள். எப்படியோ ஒரு ஆட்டோவை நிறுத்து' என்று சொல்லாமலேயே, அதற்குள் துள்ளிக் குதித்தான்.

மனோகர், தன்னைத்தானே கூறு போட்டுப் பார்த்தான் அவன் செயல்பாடு அவனுக்கே அவமானமாகத் தெரிந்தது. 'இந்தப் பொம்பளைப் பொறுக்கித்தனம் எப்படி வருகிறது? எவள் கூப்பிட்டாலும், இவனால் இயலாது அப்போதைக்குப் பையில் பணமோ, உடம்பில் வீரியமோ இல்லை அப்படியும் ஏன் இப்படிப் பின் தொடர வேண்டும். ஊமையாய் அழும் மனம் அந்த ஒரு நிமிட இடைவேளையில் களியாட்டம் போடுகிறதா..? பில்லி சூன்யம் என்கிறார்களே, அப்படி யாராவது செய்திருப்பார்களோ..? ராசியில்லாத சங்கரி வீட்டுக்கு வந்த வேளையா..?'

வீட்டுக்கும் வாசலுக்குமாய் நடை போட்டுக் கொண்டிருந்த சொர்ணம்மா, ஆட்டோவிலிருந்து இறங்கிய மனோகரைப் பார்த்து தலையில் அடித்தபடியே ஓடினாள் காந்தாமணி ஒடிப் போய் ‘தம்பி’ என்று சொன்னபடியே அவன் கைகளைப் பற்றிக் கொண்டு விம்மினாள். திண்ணையில் இருந்து முற்றத்திற்குத் தாவிய சங்கரி, மாமியார் போட்ட கூச்சலில் திகிலடைந்து நின்றாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/74&oldid=1517275" இலிருந்து மீள்விக்கப்பட்டது