பக்கம்:ஒத்தை வீடு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஒத்தை வீடு கதவு தட்டப்பட்டது கேட்டு, அவள் தரையிலிருந்து கட்டிலில் உட்கார்ந்தாள் எதிர் பார்த்ததற்கு மாறாக, மாமியார் வாசல் பக்கம் நின்றாள். "கீழே குளிச்சிட்டு இருக்கான். பேன்ட் சட்டையை வாங்கிட்டு வரச் சொன்னான்." "அவரையே வந்து வாங்கிட்டுப் போகச் சொல்லுங்க." "என்ன அதிசயமோ தெரியவில்லை - ஒருவேளை இவள் கண்களில் தெரிந்த கடுமையோ. சொர்ணம்மா பேசாமல் போய் விட்டாள். ஆனாலும், 'என் பிள்ளைய பழையடியும் துரத்துவாள் போலிருக்கே என்ற வார்த்தைகள் மட்டும் கேட்டன. சங்கரி, அலமாறியிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து, அவன் கண்ணில் படும்படி மேஜையில் வைத்தாள். அவனை அப்படிப் பேசியதிலிருந்து அவள் பட்டபாடு அவளுக்குத்தான் தெரியும். 'துரத்திட்டேனே துரத்திட்டேனே' என்று இதே அறைக்குள் வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டவள். அவன், நேற்றிரவு வராத போது, ஒரு நிமிடம் கூட இமை மூடவில்லை. அவன் வந்ததும், அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கோர தினைத்தாள். நீங்கள் பக்கத்தில் இருந்தாலே போதும். எனக்கு எதுவுமே வேண்டாம் என்று சொல்லத் துடித்தாள். ஆனால், அம்மாக்காரி அப்படிப் பேசியபோது, அதை அங்கீகரிப்பதுபோல் நின்றவரிடம் என்ன பேச்சு... எல்லாரும் இளக் காரமாய் நினைக்கும்படி, கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக உள்ளே போகச் சொன்னவரிடம், என்ன ஒட்டு.? என்ன உறவு..? சங்கரி, கதியற்று, தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தபோது, மனோகர் ஈரத் துண்டைத் தலையில் துடைத்தபடியே வந்தான். அவள் ஒருத்தி, அங்கே இருக்கிறாள் என்று அங்கீகரிக்காமலேயே, பீரோவைத் திறந்து, நீலப் பேண்டையும், மஞ்சள் சொக்காவையும் தேடினான். அந்தத் தேடலில், அவள் சேலை பாவாடைகளைக் கீழே சிதறடித்தான். கண்ணாடி முன்னாடி ஒப்புக்குத்தலை வாரினான். மேஜையில்பட்ட காகித ஒலையை பார்த்துப் பிரித்தான். 'இவள் கெட்ட கேட்டுக்கு ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்ல பாஸாயிட்டாளாம். இன்னும் ஒரு மாதத்துக்குள்ளே எந்த டிபார்ட்மென்ட்ல வேலைன்னு ஆர்டர் போடுவாங்களாம். மனோகர், காகிதத்தை கீழே வீசி அடித்துவிட்டு திரும்பிப் பாராமல் நடக்கப் போனான். இப்போது அவள் மனதிலும் ஒரு வீம்பு. "நான் வேலையில சேரப் போறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/77&oldid=762372" இலிருந்து மீள்விக்கப்பட்டது