சு. சமுத்திரம்
77
அவன் நின்ற இடத்தில் நின்றபடியே திரும்பினான். அவளுக்கு ஜீ.ஓ. போட்டான்.
“வேலையும் வேண்டாம்... கீலையும் வேண்டாம்... நான் ஒருத்தன் சம்பாதிக்குறதே போதும்.”
“எனக்குப் பணம் முக்கியமில்லை.”
“லுக் சங்கரி! நீ வேலைக்குப் போகல... போகல... போதுமா...?”
“எனக்கு அங்கேயாவது நிம்மதி கிடைக்கும்.”
“என்னால முடியலைன்னு பழையபடியும் சொல்ல வர்ற... அவ்வளவுதானே...”
“அய்யோ... நான் அந்த அர்த்தத்திலே சொல்லலே... அந்த நினைப்பே இப்ப இல்லை... உங்க அம்மா படுத்தற பாட்டைத்தான் சொல்ல வந்தேன்.”
“நீ எதைச் சொல்ல வந்தியோ... எனக்குக் கவலை இல்லை... ஆனா ஒரு விஷயத்தை விளக்கி ஆகணும். மனைவிகிட்டே குறைகள் இருந்தால், அவள் புருஷனால் முடியாதாம்... முதல்ல உன்னை கண்ணாடிலே பாத்துக்கோ... உன் மனசை நீயா சோதித்துக்கோ... ஏன் முனங்குறே... முனங்கி முனங்கி என்னை முக்காடு போட வைக்காதே... எதைச் சொல்ல வந்தாலும் வெளிப்படையாச் சொல்லு... சொல்றியா... இல்லியா...”
“எங்கிட்ட எந்தக் குறையும் நீங்க கண்டு பிடிக்க முடியாது... அப்படிக் கண்டு பிடித்திருந்தால் உங்களுக்கு என்னை நெருங்கவே மனசு வராது. ஆசையாத்தான் வாறீங்க... அப்புறமாத்தான்... சரி இப்ப இது ஒரு விவகாரமே இல்லை... இப்ப விஷயம் என் வேலை சம்பந்தப்பட்டது...”
“போக முடியாது.”
“போய்த்தான் ஆகணும்... போவேன்.”
“அப்போ... வேலையில சேருறதா லெட்டர் எழுதிப்போடு... மிஸஸ்னு எழுதாம மிஸ்ஸுன்னு எழுதிப்போடு... நம்ம ரெண்டு பேருக்குமே நிம்மதி...”
மனோகர், வெளியேறிவிட்டான். சங்கரியையும் பிடிவாதம் பிடித்துக் கொண்டது...