சு. சமுத்திரம்
79
சங்கரி, புறப்படப் போனாள் கணவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் போவதை நினைக்கும்போது, வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், அவன் இரண்டு நாளாக வீட்டுக்கு வரவில்லை. இதுதான் கடைசி நாள். அதோடு நல்ல நாள்... அஷ்டமி, நவமி கழிந்த தசமி நாள்... பதினைந்து நாட்களுக்கு முன்புதான் ஆர்டர் வந்தது. அவனிடம் சொல்லியிருக்கலாம் சண்டைக்குப் பயந்தாள். சண்டை போடப் பயந்தாள். அதோடு முந்தா நாள் வரைக்கும் அப்படியா இப்படியா என்று அவளால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை.
நேற்றுதான் சாஸ்திரிபவனுக்குச் சென்று, தான் வேலையில் சேருகிற அலுவலகத்தை தேடிப் பிடித்தாள். அங்கு நிலவும் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்க நினைத்தாள். அரசாங்க அலுவலகம் என்றாலே அவளுக்குப் பயம். அந்தப் பயம் இப்போது பெருமிதமாக உருமாறினாலும், நேற்றுவரை பயம்தான். கல்லூரித் தமிழ் பேராசிரியர் ஒருவர் கலாட்டா செய்யும் மாணவனிடம் பார்த்து, ‘கல்லூரி அருமையும் ஆசிரியர் அருமையும் நீங்க வேலையில் சேர்ந்த பிறகுதான் தெரியும்... நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள்... அரசாங்கம் கல்லூரி அல்ல... அது அடிமைக்கூடம்... ஆபீஸர் ஆசிரியர் அல்ல... அவர் ஆண்டான். உங்கள் சகாக்கள் இந்த மாவணர்கள் அல்ல... உங்கள் அனுகூலச் சத்ருக்கள்... இங்கே நான் நிற்கிறேன்... நீங்கள் உட்காருகிறீர்கள்... அங்கே ஆபீஸர் உட்காருவார்... நீங்கள் நிற்பீர்கள்... எனவே’ என்று பேராசிரியர் இழுத்தபோது, ஒருத்தன் அல்லது ஒருத்தி மூலம், ‘நம்ம அய்யாவை கவர்மென்ட் ஸர்வீஸ்ல இருந்து எவனோ செமத்தியா அடிச்சுத் துரத்தியிருக்கிறான்’ என்ற கமென்ட் கேட்டது. ஒரே சிரிப்பு. ஆசிரியரும் சேர்ந்து சிரித்தார்...
இப்போது, சங்கரி அதே வகுப்பறையில் இருப்பது போல் சிரித்தாள். ஆனாலும், அவள் சேரப் போகும் அலுவலகம், ஆசிரியர் பயமுறுத்தியதுபோல் இல்லை தலைமை அதிகாரி, அவளைப் பார்த்து ஆனந்தக் கூச்சலிட்டார். ‘அடேயப்பா... ரெண்டு வருஷ வேகன்ஸிக்கு விமோசனம் வந்துவிட்டது’ என்றார். பஸ்ஸரை அழுத்தி, அங்கு வேலை செய்கிறவர்களை வரவழைத்து, அறிமுகம் செய்து வைத்தார். ஆகமொத்தத்தில், ஒரு குடும்பப் பாங்கு சாஸ்திரிபவன் திடலில் இடைவேளையில் வீணையும் கையுமாக பக்திப் பாடல்களை இசைக்கும் பெண்கள். விதவிதமான மனிதர்கள்...
சங்கரிக்கு, தன் சக்திக்கு உட்பட்ட வகையில் மக்களுக்குச் சேவையாற்றப் போவதில் ஒரு பெருமிதம் சொந்தக்காலில் நிற்கப்போகும் கம்பீரம்.