ஒய்யாரி
9
ஒய்யாரி அந்த வீதியின் மறுமூலையை அடைந்து விட்டாள். பாதைத் திரும்பத்தில் மறைவதற்கு முன் சற்று நின்று திரும்பிப் பின்னால் நோக்கினாள்.
மெதுநடை நடந்த வாசுதேவன் அவளிடம் ஏதாவது பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்ற பெரு மகிழ்வோடு வந்து கைக்குட்டையை நீட்டினான்: ‘இந்தாங்க, இது உங்க இது தானே? ரோட்டிலே விழுந்து கிடந்தது.’
அவள் நன்றாக நடித்தாள். அவள் முகத்தில் வியப்பும் மகிழ்வும் கலந்து தவழ்ந்தன. அவளது விழிகள் ஐம்பப் பை பிடித்த தன் கையைப்பார்த்தன; இடுப்பின் பக்கம் பாய்ந்தன. திகைப்பு பிறந்தது அவள் முகத்தில். ‘ஓ! காணலே தான்’ என்ற இனிமைக்குரல் உதிர்ந்தது. அவள் நோக்கு அவன் கை மீது நீந்தியது. ‘ஆமா, இதுதான். என்னுடையது தான். ரொம்ப வந்தனம்’ என்று சொல்லி கைக்குட்டையைப் பெற்றுக்கொண்டாள். அவ்வேளையில் அவள் பார்த்தபார்வை! சிரித்த சிரிப்பு! அவை சரியாக வேலை செய்தன.
அவன் சொக்கிப்போனான்.
அவனுக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை. அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். நாலு கேள்விகள் கேட்கலாம்—நீ யார்? உனக்கு எந்த ஊர்? என்ன வேலை? இப்படித்தினம் எங்கே போகிறாய்? நீ ஏன் தனியாகப் போகிராய்? கல்யாணமாகி விட்டதா? அப்படியானால் கணவன் எங்கே? மணமாகவில்லை யெனில் அதன் மர்மம் யாது? இப்படி எவ்வளவோ விசாரித்து அறிய வேண்டும் என்ற துடிப்பு சமயம் கிடைத்தபொழுது தலை தூக்காமல் அவன் இதய ஆழத்திலேயே தங்கிவிட்டது.