ஒய்யாரி
11
அதனால் வெறும் நமஸ்காரமும் புன்னகையும் அளித்துச்செல்லும் ஒய்யாரி ஒரு நாள் ‘வீட்டுக்கு வாருங்களேன்’ என்று அன்பாக அழைத்தாள். அந்த இனிய அழைப்பு அவனை எங்கோ தூக்கிச்சென்று விட்டது. அவள் பின்னாலேயே போய் அவள் வீடு எங்கிருக்கிறது என்று ஆராயவேணும் எனும் ஆசையை வளர்த்து வந்த அவனுக்கு அவள் அழைப்பு ‘கிடையாது கிடைத்த’ பாக்கியமாய் தோன்றியது. இருப்பினும் கொஞ்சம் பிகு செய்து கொள்வது தான் கெளரவம் என்று நினைத்து ‘இன்று நேரமில்லையே, இன்னொரு நாள் வாறேன்’ என்று இழுத்தான்.
‘ஆமாம்! உங்களுக்கு ரொம்பவேலை இருக்கும். அது எனக்குத் தெரியாதா!’ என்று இரண்டு 'களுக்'குச் சிரிப்போடு அறிவித்தாள் அழகி. அவள் கிண்டல் பண்ணுகிறாள் என்று அறியாமல் போக வாசுதேவன் முட்டாள் இல்லையே! அவன் தலையைச் சொரிந்து கொண்டே சொன்னான். ‘அதுக்கில்லை... ஊம்....சரி, பரவாயில்லை வாறேன்.’
இந்த அற்புத அழகியுடன் பேசியவாறு நடந்து செல்கிற அனுபலமே தனிரகமானது தான்; இதற்கு இணையான இன்பம் வேறு எதுவுமே கிடையாது என்ற உறுதி பிறந்து விட்டது அவன் உள்ளத்தில். அவள் பொதுவான விஷயங்கள் எதெதையோ பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தாள். அவனும் அபிப்பிராயங்கள் பரிமாறி நடந்தான். இதுவரை அறியாத விஷயத்தை முடிவுகட்டி விடலாம் என்கிற ஆரையோடு கேட்டான், ‘உங்க பெயரென்ன? மோகினி தானா?’ என்று.
ஏன், நான் பிசாசு மாதிரித் தோன்றுகிறேனா?, என்ற கேள்வியும் சிரிப்பும் தெறித்தன அவள் இகழ்களினூடே.