16
ஒய்யாரி
4
மோகினியின் வாழ்க்கையில் மர்மம் இருக்கிறது என்று தான் வாசுதேவனுக்குப் பட்டது. அந்தச் சந்தேகம் ஊர்க்காரர்கள் சிலரது மனதிலும் பிறந்து பூராவும் வியாபிக்கத் தொடங்கியது. என்றாலும் யாரும் எதையும் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை.
அவள் புருஷனை விட்டு ஓடி வந்தவள் என்றொரு கட்சி. இல்லை, புருஷன் இறந்த பிறகு பிழைப்புத் தேடி இவ்வூருக்கு வந்தவள் என்று எதிர்க்கட்சி. கிடையவே கிடையாது; அவளுக்குக் கல்யாணமே ஆகவில்லை என்றொரு கட்சி. அவள் வழுக்கி விழுந்தவள்; பின் வாழ்க்கை வியாபாரமாக அத் தொழிலை வளர்ப்பவள் என்று சிலர் கருதினார்கள். எவளோ ஒரு ‘எக்ஸ்ட்ரா’ என்பதிலிருந்து, வேலை செய்ய விரும்பாத வாத்தியாரம்மா என்பது வரை விதம் விதமாக நினைத்தவர் பலர். அவள் பணக்காரியாகத் தான் இருக்க வேண்டும் என்று யூகித்தார்கள் சிலர். அது விஷயமறியாத வட்டாரத்தின் ஆதரமற்ற செய்தி என்று எதிர்வெட்டுப் போட்டு, அவளிடம் பணமும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது; சும்மா ஊரை ஏமாற்றிப் பணம் பிடுங்க வெளிச்சம் போட்டுத் திரிகிறாள் என்று ஓங்கியடித்தவர்களும் உண்டு. சிலருக்கு அவள் ‘வண்ணாத்திப் பூச்சி’. சிலர் அவளைக் குறிப்பது ‘மத்தாப்பூசுந்தரி’ என்று.
அத் தளுக்குக்காரியின் உண்மைத் தன்மையை உள்ளபடி உணர எவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவள் வீடு தேடிப்போன ‘பெரிய கைகள்’ போனார்கள்;