உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒய்யாரி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

ஒய்யாரி

‘பிசாசாகத் தான் இருக்க வேணும்னு தோணுது. இன்னும் எத்தனை பலிகளை இந்த மோகினி... ...’

அரைவெட்டு அறிஞர் கனைப்புச் சிரிப்பு ஒலிபரப்பி குறுக்கே விழுந்தார். ‘ஓய், அது அந்தக் காலம்! மோகினிப் பிசாசு மினுக்கு சுந்தரியாக வந்து இளிச்சவாயனுகளை மயக்கிப் பணம் பிடுங்கும்னு சொல்றவன் சொன்னாலும், நம்புகிற நமச்சிவாயங்கள் வாழ இது அரேபியன் நைட்ஸ் காலமில்லை ஐயா, இல்லை! காது குத்த வேறு இடம் தேடிப்போம். ஹே!’

அவரது மிடுக்கான பேச்சு தான் வெற்றி கண்டது. எனினும் பஞ்சாங்க அடிமைகள் இரண்டு மூன்று பேர் சேராமல் போகவில்லை. அவர்களுக்கிடையில் தாசர் முணங்கித் தன் வயிற்றெரிச்சலைத் தணித்துக் கொண்டார்: ‘இவனுக் கெல்லாம் என்ன தெரியும்! ஓங்கி யடிச்சுப் பேசறதுக்குப் படிச்சிட்டானுக. அவ்வளவு தான்!’

‘ஆமா, வாழ்க்கையிலே விரக்தியுற்று மிஸ்டர் பெரிய மனிதர் தற்கொலை செய்து கொண்டதற்கும், கவலை அதிகமாகி ஸ்ரீமான் பட்டுலேஞ்சி மூளை கலங்கிப் போனதற்கும் மோகினி எப்படி பொறுப்பாக முடியும்?’ என்று விவாதத்துக்கு அடிகோலினார் அரைவெட்டு அறிஞர்.

‘ஹஹ, நல்லாச் சொன்னீக போங்க, திடீர்னு நம்ம அவாளுக்கு அப்படி என்ன விரக்தி வந்திட்டுது பாஷாணத்தைத் தின்னுட்டு சாகணும்கிறதுக்கு. அதுவும் இரவு ஏழு மணிக்கு மோகினி வீட்டுக்குப் போய் ஒன்பதரை மணிக்கு வீடு திரும்பியவர், இரவில் வெகுநேரம் அமைதியற்றுக் கிடந்து, உடனேயே வாழ்வை முடித்துக் கொள்ளணும்னா, ஏதோ விஷயம் இருக்குன்னுதானே அர்த்தம். இல்லையா?’ - இது ஒருவர் கட்சி.

‘இருக்கு இருக்கு. நீங்க சொல்றேளே ரொம்பவும் வாஸ்தவமான பேச்சு. ஏதோ விஷயமிருக்கு. இருந்து தானே ஆகணும். ஆனா அது என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/26&oldid=1908437" இலிருந்து மீள்விக்கப்பட்டது