ஒய்யாரி
37
மோகினி பலே கைகாரி. அவள் கெளரவமானவளாகக் காட்சி யளித்தாலும் எல்லாத் தொழிற் காரிகளிடமும் உள்ள பண்பு தான் இருக்கிறது. அவன் நண்பர்கள் சொல்வதுண்டு இம்மாதிரிப் பெண்களிடம் ரொம்ப எச்சரிக்கையாகப் பழக வேண்டும். கொஞ்சம் ஏமாந்தலே போதும். தளுக்கி மினுக்கிக் குலுக்கி, தட்டிக் கொடுத்து ‘சரி தம்பி, போயிட்டு வா’ என்று அனுப்பி விடுவார்கள். ஆனால் பணத்தைப் பிடுங்கிக் கொள்ள மறக்க மாட்டார்கள்.
அவனுடைய முதல் அனுபவமே அப்படித் தான் முடிந்தது, அவனுக்கு ரொம்பநாளாக ஆசை யிருந்தது, அது மாதிரியான வீடு ஒன்றுக்குச் சென்று திரும்ப வேண்டு மென்று. பையில் இருபது ரூபாய் எடுத்து வைத்துக்கொண்டு அந்திமந்தாரைகள் மலர்ந்து நிற்கும் தெருப்பக்கம் போனான். கதவின் பின் நின்று கைஜாடை காட்டியவர்களும், வாசல் படியில் நின்று ‘வா வா’ என அழைத்தவர்களும், கண்ணடித்துக் கூப்பிட்டவர்களும்—அந்த அனுபவமே அவனுக்குப் புதிது. பட்டணத்து எக்ஸிபிஷனில் நுழைந்த பட்டிக்காட்டான் மாதிரி. மிரள மிரள விழித்தபடி நடந்தான். சிலர் சிரித்தார்கள். அவர்கள் தன்னைக் கேலி செய்கிறார்கள் என்றே கருதினான். ‘இங்கே வாங்களேன்’ என்றாள் ஒருத்தி. பார்த்தான். பரவால்லே என்று வீட்டினுள் புகுந்து விட்டான். அவள் கதவடைத்து விட்டுப் பின் சென்றாள். பையன் புதுசு என்பது அவளுக்கு சுலபமாகவே புரிந்து விட்டது. அன்பாகத் தொட்டு அழைத்துச் சென்று பாயில் உட்கார வைத்தாள். தானும் அருகமர்ந்து என்னென்னவோ சொன்னாள். கேட்டாள். செய்தாள். அவனுக்கு பயம். அவன் இதயம் ரைஸ்மில் மாதிரி ‘திக்கு திக்கு’ என்றடித்தது. இங்கு ஏனடா வந்தோம் என்று முழித்துக் கொண்டு உட்கார்த்திருந்தான். அவள் கிச்சுக் சிச்சு காட்டி விளையாடினாள்.