உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒய்யாரி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஒய்யாரி

‘இந்தா பாரு மோகினி என்னை ஏமாற்றி வந்தது போதும். இன்னும் ஏமாற்றிக் கொண்டிருப்பதை விட, நீ இங்கே வரவேண்டாம்; தொலைஞ்சு போ என்று சொல்லி விடேன். எதுக்காக வீண் பசப்புதல்? பணம் பிடுங்குவதற்காகலா?’ என்றான் அவன். அட பரவால்லியே! நமக்குக் கூட துணிச்சல் ஏற்பட்டு விட்டதே என்று தன்னையே பாராட்டிக் கொண்டான்.

அவன் அவனை ஒரு தினுசாகப் பார்த்தாள்.

‘போதும் போதும் உன் விஷப் பார்வையும் சிரிப்பும், இனிப்பான பேச்சும் தொட்டுப் பிடித்தலும் தான் லாபம். உனக்குப் பணம் கொட்டிக் கொடுக்கிறவனின் மூளை குழம்பாமல் என்ன செய்யும்? ஏன் தற்கொலை செய்துகொள்ள மாட்டான்? ஊர்ப் பெரிய மனிதன் உன்னால் ஏமாந்த சோணகிரியானதை மறைப்பதற்காக ஊரைவிட்டு ஓடினான் என்றால், ஏன் ஓடமாட்டான்? நீ மோகினிப் பிசாசுதானோ என்னவோ!’—வரவர அவனது ஆத்திரம் சொல்லுக்குச் சூடேற்றி வந்தது.

அவள் மௌனமாக யிருந்தாள். அவள் பார்வை தரையில் பதிந்திருந்தது. பெருமூச்செறிந்து, எழுந்து விலக முயன்றாள். அவன் அவள் கையைப் பிடித்திழுத்து அருகே உட்கார வைத்தான். வெறித்தனமாக அவளை அணைத்து முகத்தில், உதடுகளில் முத்தம் பதித்தான். ‘மோகினி, இன்று நீ என்னை ஏமாற்ற முடியாது. ஆமா. வேணும்னா இன்னைக்கு உனக்குத் தேவையான பணம் எடுத்துக் கொள். இந்தா’ என்று மணிப்பர்ஸை அவள் மடியிலே போட்டான்.

அவள் சிரிக்கவில்லை. அவனை மயக்க முயலவில்லை. அவனிடமிருந்து விலகிச் செல்லவே திமிறினாள். அவன்

விடமாட்டான் என்று படவே அவள் மெதுவாகச் சொன்னாள்: ‘ராஜா, வேண்டாம். விட்டுவிடு.’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/42&oldid=1908298" இலிருந்து மீள்விக்கப்பட்டது