6
ஒய்யாரி
2
மிஸ் மோகினி வண்ணக் கலவைகளின் சித்திரமாய், வாசனை அலைகளின் கலைப் பொருளாய், நாகரிக வளர்ச்சியின் அளவு கோலாய் பகட்டாக நடந்து வந்து வீதி முனையைத் திரும்பினாள் வழக்கம் போல. கண்மீன்கள் பலவற்றைப் பிடித்திழுக்கும் வலையானாள்.
ஆண்கள் மட்டுமல்ல! பெண்கள் கூட வைத்த விழி வாங்க மறந்து போய் அவளையே கவனித்து நின்றனர். ‘என்னமாத் தான் அழகு பண்ணித் திரியுதா! தேவடியாளா இருப்பாளோ?’... ‘சினிமாக்காரியாக இருந்தாலும் இருப்பாள்!’ ...‘ இருப்பா, இருப்பா. இப்பதான் கெட்டலைகிறதுகளுக்குக் கணக்கு வழக்கு இல்லையே!’ ... ‘இருந்தாலும் அவள் டிரஸும், அவள் பாஷனும், கடக்கிற ஸ்டைலும்...’ ‘அவள் கழுத்திலே போட்டிருக்கிற செயினைப் பாரு. காது லோலக்கு புது டிசைனா யிருக்கே. இவள் நகைகளை எங்கே வாங்குறாளோ. எப்படித்தான் பணம் கிடைக்குதோ?’ ‘அவளுக்கு ஏன் பணப் பஞ்சம் வரப் போகுது?’ — இப்படி பெருமூச்சு, ஏக்கம், பொறாமை, வியப்பு, ராஸிக்கியம், வயிற்றெரிச்சல், வெறுப்பு, பாராட்டுதல், பழிப்பு முதலிய பலவித உணர்ச்சிகளையும் அந்த வட்டாரத்துப் பெண்ணுலகிலே விதைத்துத் திரியும் விந்தையாக உலவிய மோகினியை வீதியில் கண்டதும், அவள் பின்னால் மெதுநடை நடந்து அவள் பின்னழகை ரசித்துக் கொண்டே போகிற ஒன்றிரு வாலிபர்கள் உண்டு. அவளைத் தாண்டி வேகமாய் போய், பின் அவள் மின் வீச்சுப் பார்வையைக் கண்ணிலே ஏற்கும் ஆசையோடு