11
காற்று வேகம் மிக மிக, அவன் கையின் அழுத்தம் மிகுந்தது. சட்டையை இழுத்து இழுத்துப் போர்த்துக் கொண்டபடி அவன் தன் உடலோடு அணைத்துக் கொண்டான்.
ஒருமணி நேரம் ஊய் ஊய் என்று ஊதிய காற்று ஓய்ந்தது. கதிரவனிடம் தன் தோல்வியை ஓப்புக் கொண்டது.
'"நான் தோற்றுவிட்டேன். நீ உன் வல்லமையைக் காட்டு" என்றான் காற்றண்ணன்.
அதுவரையில் மேகங்களுக்குப் பின்னே ஓளிந்திருந்த கதிரவன் வெளியில் வந்தான்.
கிழவன் உட்கார்ந்திருக்கும் இடத்தை நோக்கினான். நேராக அந்தக் கிழவன் மீது தன் கதிர்களை வீசினான்.
சிரித்த முகத்தோடு தன் ஒளிக் கதிர்களை அவன் கிழவன் மீது செலுத்தினான்.
கிழவனின் குளிர் அகன்றது. வெயில் ஏற ஏறப் புழுக்கம் மிகுந்தது. முதலில் முடங்கியிருந்த கைகளை அகற்றியவன், சிறிது நேரத்தில் வேர்க்கத் தொடங்கியதும் மேல் சட்டையைக் கழற்றிப் பக்கத்தில் போட்டான். மேலும் வெப்பம் மிகவே உள் சட்டையையும் கழற்றிப் போட்டான். வியர்வையைத் துடைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.