இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13
பொன்னி நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டைப் பூவேந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். பூவேந்தனுடைய பட்டத்து அரசியின் பெயர் மலர்க்கொடி.
பூவேந்தன் நாட்டை நன்றாக அரசாண்டு வந்தான். நாடு முழுவதும் நல்ல வளம் நிரம்பியதாக இருந்தது. இயற்கை வளமும் நல்ல அரசாட்சியும் இருந்ததால் அந்த நாட்டு மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் இருந்தார்கள்.
நாடு நன்றாக இருந்ததால் அரசனுக்கு வேலையும் குறைவாகவே இருந்தது. திருட்டு என்றும், அடிதடி என்றும், மோசடி என்றும் வரும் வழக்குகள் மிகக் குறைவாகவே இருந்தன.
அரசன் அரண்மனையில் நிறைய ஆட்களை வேலைக்கு வைத்திருந்தான். அரசி மலர்க்கொடி ஒவ்வொரு புது ஆளைச் சேர்க்கும் போதும், தேவையில்லாதபோது எதற்காக ஆள் சேர்க்க வேண்டும் என்று கேட்பாள்.
"வேலைக்கு ஆட்கள் நிறைய இருந்தால் நமக்கு வசதி தானே!" என்று கூறுவான் அரசன்.