பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

"அரசே! அது தவறு. தேவைக்கு அதிகமாக ஆட்கள் இருந்தால், வேலை சரியாக நடக்காது" என்று கூறுவாள் அரசி மலர்க்கொடி.

"இந்த ஆள் நமது அமைச்சரின் உறவுக்காரன். இருந்துவிட்டுப் போகட்டுமே" என்று வேலைக்குச் சேர்த்துக் கொள்வான்.

இப்படி யார் வந்து வேலை கேட்டாலும், தகுதி பார்க்காமலும் திறமையை நோக்காமலும் பலரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். இதனால் அரண்மனையில் வேலைகள் சரிவர நடக்கவில்லை.

ஒருநாள், அரண்மனைப் பெட்டகத்தில் இருந்த பொன் நாணயங்கள் காணாமல் போய்விட்டன. முதல் நாள் இருப்பு வைத்துப் போன நாணயங்கள் மறுநாள் காலையில் காணாமற் போனது கண்டு நிதி அதிகாரி கலங்கிப் போனார்.

இது வெளியில் தெரிந்தால் பூவேந்தன் ஆட்சிக்கே கெட்ட பெயர் உண்டாகிவிடும், என்று நிதியதிகாரி அரசனிடம் வந்து பொன் நாணயங்கள் காணமல் போன செய்தியை மிகக் கமுக்கமாகக் கூறினார்.

யாரோ கள்ளச்சாவி போட்டுப் பெட்டகத்தைத் திறந்திருக்கிறார்கள். உறுதியாக அரண்மனையில் உள்ள யாரோதான் திருடியிருக்கிறார்கள் என்று தோன்றியது. வெளியில் இருந்து யாரும் திருடர்கள் வந்ததாகத் தெரியவில்லை.