33
அந்த நொடியிலேயே அவருடைய தலையைச் சீவி எறிந்தான் பேய்நாகன்.
இதைக் கண்டு மற்ற அமைச்சர்கள் பயந்து விட்டனர். படைத்தலைவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தனர்.
தங்கள் அரசன் கையில் சாவதா எதிரி அரசன் கையில் சாவதா என்று அவர்களுக்குப் புரியவில்லை.
கஞ்சபுரிப் படைகள் நெருங்கிவிட்டன. கோட்டையைச் சுற்றி வளைத்துக் கொண்டன.
அவனை மூன்று நாட்களுக்குள் முறியடித்து விரட்டிவிட வேண்டும் என்று கட்டளையிட்ட பேய் நாகன், கோட்டைக்குள் இருந்த ஒரு இரகசிய அறைக்குள் தன் குடும்பத்துடன் ஓடி ஒளிந்து கொண்டான்.
கோட்டைக்குள் இருந்தவர்கள், என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தனர்.
கோட்டை வாசலில் காவல் பார்க்கும் வீரன் ஒருவன் இருந்தான். அவனுடைய தந்தையார் வயது முதிர்ந்த ஒரு கிழவர்.
தன் மகன் மூலம் நாட்டுக்கு வந்த ஆபத்தை அறிந்த அவர், "மகனே! எதிரியை முறியடிக்க என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. என்னைத் தலைமை அமைச்சரிடம் கூட்டிக் கொண்டு போ" என்றார்.