பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அவ்வாறே அந்த வீரன் அவரைத் தலைமை அமைச்சரிடம் அழைத்துச் சென்றான்.

"அமைச்சர் அவர்களே, உங்களுக்கு நான் உதவி செய்யலாமா?" என்று கேட்டார் கிழவர். "ஆஆ" என்று சிரித்தார் தலைமை அமைச்சர்.

"புல் தடுக்கினாலும் விழுந்துவிடக் கூடிய கிழவன் நீ. நீ எனக்கு உதவி செய்யப் போகிறாயா? வேடிக்கைதான்" என்று அலட்சியமாகப் பேசினார் தலைமை அமைச்சர்.

அருகில் இருந்த அமைச்சர், "கிழவர் உடலில் வலு இருக்காது. மூளையில் ஏதாவது திட்டம் இருக்கலாம், கேட்டுத்தான் பார்ப்போமே!" என்றார்.

"எனக்கு நம்பிக்கையில்லை. நமக்கெல்லாம் இல்லாத மூளையா இந்தக் கிழவனிடம் இருக்கப் போகிறது" என்றார் முதலமைச்சர்.

"எதற்கும் கேட்டுப் பார்ப்போம். சரியான வழி சொல்லாவிட்டால், இப்போதே இந்தக் கிழவனை இந்திரலோகத்துக்கு அனுப்பிவிடலாம்" என்றார் படைத் தளபதி.

"சரி, உன் திட்டம் என்ன சொல். உன் திட்டம் சரியில்லை என்றால் இப்போதே தலையைச் சீவி விடுவேன்" என்றார் தலைமை அமைச்சர்.