பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கிழவன் அழைத்துச் சென்றான். சுரங்கப் பாதையைத் திறந்து விட்டான். அந்தச் சிறிய சுரங்கப் பாதையினுள் முதலில் பஞ்சமுகன் சென்றான். அவனைத் தொடர்ந்து படைத் தளபதிகள் சென்றார்கள். தொடர்ந்து படைவீரர்கள் சென்றார்கள். ஒருவர்பின் ஓருவராகச் சென்று, சுரங்கப் பாதையை விட்டு வெளியில் வந்தவுடன், அங்கு தயாராகக் காத்திருந்த அதர்வண நாட்டு வீரர்கள் அவர்களை இழுத்துப் போட்டு வெட்டிக் கொன்று விட்டார்கள். இவ்வாறு கஞ்சபுரி நாட்டு வீரர்கள் எல்லோரும் ஒருவர்பின் ஒருவராகச் சென்று வெட்டுப்பட்டு இறந்தார்கள்.

கிழவனின் தந்திரத்தால் கஞ்சபுரி அரசனும் அரசனுடைய படை வீரர்களும் ஒருவர்கூட மிஞ்சாமல் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.

அதர்வண நாட்டில் பேய்நாகன் ஆட்சி நீடித்தது.

மறுநாள் கிழவன் அரசவைக்கு வந்தான்.

அரசன் பேய்நாகன் வெற்றி தேடித்தந்த அமைச்சர்களுக்கும், படைவீரர்களுக்கும் பரிசுகள் கொடுத்துக் கொண்டிருந்தான்.

தலைமை அமைச்சர் கிழவன் மண்டபத்திற்குள் நுழைவதைப் பார்த்தார்.