பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53



கடற்கரை மலையம்மன்

ஒரு காலத்தில் கான்ஹோவாவுக்கு அருகில் ஒரு குக்கிராமம் இருந்தது. அங்கு எளிமையாக வாழ்ந்து வந்த உழவர் குடும்பம் ஒன்று இருந்தது.

அவர்கள் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் குடிசை, கட்டுமரக் கொம்புகளைச் சேர்த்துக் கட்டப் பெற்றிருந்தது. வைக்கோலால் கூரை வேயப்பெற்று, மூங்கில் சப்பைகளால் குறுக்குத் தட்டிகள் கட்டப் பெற்றிருந்தது. இந் நாளிலும் அன்னாம் நாட்டுப்புறங்களில் இப்படிப்பட்ட பல குடிசைகளைக் காணலாம்.

அந்தக் குடிசைக்குப் பின்னால் சிறு மரக்காடு சூழ்ந்த ஒரு வெளிநிலம் இருந்தது. அந்த வெளிநிலத்தின் கோடியில் ஒரு சிறிய ஓடை ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஓடையில், பருவத்திற் கேற்றபடி நீர் தெளிவாகவோ, கலங்கலாகவோ ஓடிக் கொண்டிருக்கும். அது என்றும் வற்றாமல் ஓடிக் கொண்டிருந்தபடியாலும், காட்டுவண்டல் சேர்ந்தபடியாலும், அந்தக் குன்றுவெளிச் செம்மண்தரை முழுவதும் வளமுள்ள பூமியாயிருந்தது. அங்கு தாரோ, யாம், முதலிய கிழங்கு வகைகள் செழிப்பாக வளர்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/55&oldid=1165237" இலிருந்து மீள்விக்கப்பட்டது