57
ருந்தது. அவன் பெற்றோரும் தங்கள் ஈமப் பிரார்த்தனை செய்ய மகன் இல்லையே என்று வருந்தினார்கள்.
கடல் பக்கத்திலேயே இருந்தது. அவன் தன் விளையாட்டினால் நேர்ந்த வினையை எண்ணி மனம் வருந்தி அந்தக் கடலில் விழுந்து தன் முடிவைத்தேடி கொண்டானா? அல்லது காட்டிடையே வனவிலங்குகளிடம் சிக்கி மடிந்தானா? ஒன்றும் தெரியவில்லை.
நாட்களும் மாதங்களும் ஆண்டுகளுமாய்க் காலம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அந்தக் குடும்பத்தினர் ஓடிப்போன தங்கள் மகனைப்பற்றி ஒரு செய்தியும் கேள்விப்படவில்லை. ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்த அந்தப் பெற்றோர்கள், தங்கள் மகனை மீண்டும் காண்போம் என்ற நம்பிக்கையின்றியே வாழ்ந்து வந்தார்கள். கடைசியில் தங்கள் பெண்ணுக்குப் பதினாறு வயதாகும் போது, ஒருவர் பின் ஒருவராகக் கண்ணை மூடி விட்டார்கள். அவர்களுடைய ஈமச் செலவுகளுக்காக அந்தப் பெண் தன் வீட்டை விற்று விட்டாள். பிறகு ஒரு பணக்கார வீட்டிலபோய் வேலை பார்த்துத் தன் வாழ்க்கையை நடத்தி வந்தாள்.
ஓடிப்போன அவளுடைய அண்ணன் எப்படியோ ஒரு பெரிய துணி வியாபாரியாகி விட்டான். அவன் உயர்தரமான பட்டுத் துணிகள் வாங்கி வந்து வியாபாரம் செய்வதற்காக பலமுறைகள் சீனாவுக்குப் போய் வந்து பெரும் புகழ்பெற்ற வணிகனாகி விட்டான்.