பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யாவை மீட்டு...

93


போனாத்தான் காரியம் குதிரும்" என்று சொன்ன ஒரு பெண்ணின் அறிவுரையை ஏற்காமல், ஒரு துள்ளலில் படிக்கட்டுகளைத் தாவி, விசாலமான அந்த அறைக்குள் போய் "கும்பிடுறேனுங்க" என்றாள். ஹெட்கான்ஸ்டபிள் தலையைச் சொரிந்து கொண்டும், ரைட்டர் வயிற்றைச் சொரிந்து கொண்டும் அங்கே நின்றார்கள்.

சப் இன்ஸ்பெக்டர் பையன், புருவத்தை உயர்த்திக் கொண்டு "நீ நீ" என்றார். சட்டென்று பதில் சொன்னாள்:

"லோகுவுக்கு. லோகுவுக்கு வேண்டியவங்க. அய்யாவப் பாக்க வந்தேன்."

"என்னம்மா விஷயம்?"

"அதோ அவருதாங்க என்னோட அய்யா. ஏட்டய்யா இழுத்துக்கிட்டு வந்து வச்சிருக்காரு. ரெண்டு நாளா அவரு துள்ளத் துடிக்கக் கிடக்காரு."

சப் இன்ஸ்பெக்டர், கேள்விப் புருவத்தோடு பார்த்தார்.

"குட்டாம்பட்டில சாராயம் குடிச்சிட்டு கலாட்டா பண்ணுனான். என்னால இழுக்காம வரமுடியல. ஒரே கலாட்டா. உருள்றான், ஒம்மாங்றான், ஒக்காங்றான். என்னயே போடா வாடான்னுட்டான். அப்டி இருந்தும் அடிக்காம கூட்டியாந்தேன்."

உலகம்மை எரிச்சலோடு சொன்னாள்.

"அவரு சொல்றதுல குடிச்சாங்றது மட்டும் வாஸ்தவம். மத்ததெல்லாம் அண்டப்புளுவு, ஆகாசப் புளுவுங்க!"

"ஆமா நீ லோகுவோட என்னைப் பாத்தியே. அப்போ சொல்லியிருக்கலாமே? அவரும் எங்கிட்ட சொல்லல!"

"நான் அவருகிட்ட இதச் சொல்லவே இல்ல. மெட்ராஸுக்குப் புறப்பட்டு நிக்கவர்கிட்ட அபசகுனமா எங் கதையைச் சொல்ல விரும்பல. அவரு, அவரோட சொமையையே சுமக்க முடியாம இருக்கயில், நான் என் சுமைய எப்படிய்யா தூக்கிக் குடுக்க முடியும்?"

சப் இன்ஸ்பெக்டர், அவளை ஆச்சரியமாகப் பார்த்தார். அவள் வார்த்தை, சத்திய ஒலியாய் முழங்குவது கண்டு, புன்னகை செய்தார். அந்தப் புன்னகை தந்த தைரியத்தில், உலகம்மை மடமடவென்று பேசினாள்: