பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. ஊர் வயல் நட்டு...

ர்க்குளம் பெருகிவிட்டது.

எப்பேர்ப்பட்ட மழையிலும், தலைகீழாக நின்றால் கழுத்துவரை நிற்கும் நீரைக்கொண்ட குளம், இப்போது தலைகீழாக மாறிவிட்டது. ஆண்டுக்கணக்கில் வற்றிப் போயிருந்த அந்த மலட்டுக்குளம், இப்போது கர்ப்பிணிப் பெண் போல் தளதளத்தது. அரைக்கோள வடிவத்தில் அமைந்த அதன் கரையில் நின்று பார்த்தால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை, நீர் நிரம்பிய நிலப்பரப்புகளில் ‘தொழி வேலையும்’. அங்காங்கே நடவு வேலையும், உழவு வேலையும் நடப்பது தெரியும். வெள்ளை வெளேரென்று இருந்த நீர்ப்பகுதியையும், அதன் இடையிடையே இருந்த நாற்றுக்களையும் பார்த்தால், வெள்ளைத் தாளின் சில இடங்களில் பச்சை மையில், ஒரு சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருப்பது போல் தோன்றும். கோணைத் தென்னை மரங்கள், அந்த வாக்கியங்களுக்குக் கேள்விக்குறிகள் போலவும்: கிணறுகளை ஒட்டியிருந்த ‘சரல்கள்’ முற்றுப்புள்ளிகள் போலவும் காட்சியளித்தன.

குளம் பெருகியதை நம்ப முடியாதவர்கள்போல், ஊர்க்காரர்கள், நீருக்குள் கைகளை விட்டுப் பார்த்துக் கொண்டார்கள். சொல்லப் போனால், அது குளமுமல்ல; ஏரியுமல்ல. ‘இரண்டுங்கெட்டான்’ மைதானம் அது. மைதானம் என்று சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. குட்டாம்பட்டியில் ஜனித்த ஒவ்வொருவரும், அறுபதாண்டுகள் வாழ்ந்தால், அந்தக் குளம் நிரம்புவதை இரண்டு மூன்று தடவை பார்க்கலாம். இப்போது பத்துப்பதினைந்து வயதில் இருக்கும் சிறுவர்கள் குளப்பெருக்கத்தை இப்போதுதான் பார்க்கிறார்கள். சிறு வயதில் பார்த்ததுபோல் தோன்றிய நீர்ப்பெருக்கை வாலிபர்களால் நினைவுபடுத்திக் கொள்ள முடிந்தது.

வயற்பரப்பின் சில இடங்களில், எள் விதைத்திருந்தார்கள். அப்படி விதைத்தால், அந்தப் பக்கமாக வரும் கணக்கப்பிள்ளைக்கு அடிக்கடி இளநீர் பறித்துக் கொடுப்பதும் உண்டு. அங்கே வரும்போதெல்லாம் பிள்ளைக்கு நீர்த்தாகம் எடுப்பதும் உண்டு. இப்போது பெருகிவிட்ட நீரில், ‘ஆழ்ந்து போன நிலங்களையும்’ எள்ளையும் சுட்டிக்காட்டி, இவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்த அளவில் ‘எள் விழ இடமில்லை’ என்ற பழமொழி உண்மையாகிவிட்டது. அரசாங்கத்திடம் சொல்லி, வெள்ளத்தால்