பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

ஒரு கோட்டுக்கு வெளியே ...


கேட்பான். பெரிய மனிதராக இருந்தால், அவரது குடும்பத்தில் நடப்பதாகக் கருதப்படும் நல்ல சங்கதிகளை மட்டும் கேட்டு வைப்பான். எப்படியோ, அந்தக் கடைக்கு ‘மைனாரிட்டியினரே’ வந்தாலும், அவர்களே வம்புதும்புக்குப் போகாமல் அன்றாட வாழ்க்கையையே பெரிய போராட்டமாக நடத்தும் ‘சைலன்ட் மெஜாரிட்டிக்கும்’ பேசுவது போல் தோன்றும்.

ஊரில், சூடான செய்தி சுவையாக அடிபட்டுக் கொண்டிருந்தது. “மாரிமுத்து நாடாருக்கு சரியான அடியாம். சப் இன்ஸ்பெக்டர் பெல்ட கழத்தி அவர வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாராம். அதனால் நாடாரு முதுகு வீங்கிப்போயி படுத்த படுக்கையா கிடக்காராம். உலகம்மையும் சட்டாம்பட்டிப் பையனும் ராத்திரி தென்காசில ஒரு ரூம் எடுத்துத் தங்குனாங்களாம். அப்புறம் உலகம்ம சப் இன்ஸ்பெக்டரையும் மயக்கிட்டாளாம். மாரிமுத்து நாடாரு புறப்படும்போது புறப்பட்ட ஒலகம்மையை சப் இன்ஸ்பெக்டர் கண்ணடிச்சி நிக்க வச்சானாம். அப்புறம் அரை மணி நேரம் அவளோட ஜாலியா இருந்திட்டு அனுப்பி வச்சானாம். காலம் கலிகாலம். முன்னெல்லாம் இப்படியா?”

மேற்கூறிய சூழ்நிலையில், எந்த அம்சத்தை எப்படி எடுக்கலாம் என்று சிறிது யோசித்துக் கொண்டிருந்தது மசால்வடைக் கூட்டம். அதோடு விவகாரம் போலீஸ் வரைக்கும் போய்விட்டதால் யாரும் வாயை அதிகமாக விற்க விரும்பவில்லை. காத்தமுத்துவால் தாங்க முடியவில்லை. பேச்சு சூடானால்தான், ஆறிப்போயிருக்கும் அவன் டியில் ‘சூடில்லன்னு’ யாரும் சொல்ல மாட்டார்கள். அதோடு ஒவ்வொருவனும் ‘மூணு சிங்கிளாவது’ குடிக்கணுமுன்னா பேச்சில தீப்பத்தனும். ஆகையால் காத்தமுத்துவே இப்போ வழிமொழிந்தான். அதோடு உலகம்மையைப் பற்றி அவன் என்ன பேசினாலும், அவனை “என்ன?” என்று கேட்க அவளுக்கு ஆள் கிடையாது.

“இந்த சப் இன்ஸ்பெக்டர் இருக்கது வரைக்கும் நம்ம உலகம்மய ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லுதாவ.”

மசால் வடையைத் தின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி, அதை வைத்துக்கொண்டே சொன்னார்:

“காலம் கெட்டுப்போச்சி வே. இல்லன்னா ஊர் விவகாரத்த ஊரோட முடிக்காம முழுத்த பொம்புளப்பிள்ள முன்னப்பின்ன தெரியாதவன் கிட்ட படுத்துட்டு ஊர் மானத்த இப்டி வாங்குவாளா?”

“நம்மளல்லாம் பொட்டப் பயலுவன்னு வேற சொல்லிட்டா."