பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

ஒரு கோட்டுக்கு வெளியே ...



"நாராயணசாமி சொல்றதும் ஒரு வகையில் சரிதான். வயசான மனுஷன மாரிமுத்து பெரிய்யா அப்டிப் பண்ணியிருக்கக் கூடாதுதான்.”

ஆசாரியால் பொறுக்க முடியவில்லை:

"என்னய்யா, செத்தபேச்சுப் பேசுறிய ஒங்க பேச்சில உப்பு இருக்கா? உரப்பு இருக்கா? வாங்குன கடன குடுக்காதது மட்டுமில்ல, ஒரு பொண்ணோட வாழ்வ பாழாக்கிட்டா. யாருக்குத்தான் கோவம் வராது ஒம்ம மவள இப்படிப் பண்ணுனா இப்டிச் சம்மதிப்பீரா? அதனால் அவரு அடச்சாரு. அதுக்காக பெரிய மனுஷனை இன்ஸ்பெக்டர வச்சி அடிக்கண்வக்கிறதா? என்னய்யா நியாயம் பேசுறிய, நியாயம் தேவடியா முண்டய செருப்பக் கழத்தி அடிக்காம.”

நாராயணசாமி நாடாருக்குச் சொல்ல முடியாத கோபம். அவரே செருப்பால் அடிபட்டதுபோல் புழுங்கினார். விவகாரத்திற்குக் கொஞ்சம் கம்யூனல் கலர் கொடுத்தார்.

"வே ஆசாரி மரியாதியா பேசும். ஒம்ம சாதிப் பொம்பிளய தேவடியா முண்டன்னு பேசினா பொறுப்பியா? ஒம்ம சின்னய்யா மவள தேவடியா முண்டன்னு பேசுனா பொறுப்பியா? ஒம்ம பொண்டாட்டிய தேவடியா முண்டன்னு பேசினா பொறுப்பியா? ஒம்ம மவள பேசினா பொறுப்பியா நாடார் பொண்ணுன்னா தெருவில கிடக்கு. அப்படித்தானே? தங்கத்த திருடுறதுதான் திருடுறிரு. அத இப்டிப் பேசித்தான் திருடனுமா? இனிமேல் நாடார் பொம்புளங்கள கேவலமாப் பேசினர்னா கேவலப்பட்டுப் போயிடுவீரு."

காத்தமுத்து, தான் வரையறுத்துக் கொண்டிருக்கும் லெவலை நாராயணசாமி தாண்டிவிடுவார் என்பதை உணர்ந்து, லெவலைக் கொஞ்சம் கூட்டிக் கொண்டாலும் இப்போது அதை, அதற்குமேல் உயர்த்துவது அபாயம் என்பதை உணர்ந்து கொண்டான். இடையே விழுந்து பேசினான்:

“என்ன நாராயணசாமி மாமா நீரு பேசுறது? இங்க ஆசாரி வாராவ! பண்டாரம் வாராவ! பிள்ளமாரு வாராவ! செட்டி வாராவ! கோனாரு வாராவ! தேவரு வாராவ! சொந்த அண்ணந்தம்பி மாதுரி ஜாதி வித்தியாசமில்லாமப் பழகுறோம். நீரு சாதிச் சண்டயக் கிளப்புறது நியாயமா? அப்டி என்ன ஜாதி வாழுறது? குத்திப் பாத்தா ஒரு ரத்தம், கூடியழுதா ஒரு சத்தம்.”

இந்தச் சமயத்தில், மேல் ஜாதிக்காரர்கள். கடையோடு சேர்ந்து கட்டப்பட்ட திண்ணையில் இருக்கும்போது, பாய்லர் அடுப்புத்